மதுவில் விஷம் கலந்து மகளுக்கு கொடுத்து விட்டு தொழிலாளி தற்கொலை
சூளகிரி அருகே மனைவி பிரிந்து சென்றதால் வேதனை அடைந்த தொழிலாளி மதுவில் விஷம் கலந்து மகளுக்கு கொடுத்து தானும் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
சூளகிரி:
கூலித்தொழிலாளி
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள உலகம் கிராமத்தை சேர்ந்தவர் சாக்கப்பா (வயது 38). கூலித்தொழிலாளி. இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. இதனால் அவரது மனைவி கோபித்து கொண்டு மேடுப்பள்ளியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதனால் மனமுடைந்த சாக்கப்பா கடந்த 29-ந் தேதி மதுவில் விஷம் கலந்து தனது 7 வயது மகளுக்கு வற்புறுத்தி கொடுத்து விட்டு தானும் குடித்தார். இதில் மயங்கி விழுந்த சாக்கப்பாவையும், அவரது மகளையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பரிதாப சாவு
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சாக்கப்பா நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். சிறுமியை மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாஸ்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மதுவில் விஷம் கலந்து மகளுக்கு கொடுத்து விட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சூளகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.