தொழிலாளி தற்கொலை
தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
சிவகாசி,
சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரம் கருமன்கோவில் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரகுமார் (வயது 44). அச்சக தொழிலாளி. இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். மகாலட்சுமி அதே பகுதியில் உள்ள ஒரு தையல் கடையில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் மகேந்திரகுமார் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று பெண் குழந்தைகள் 2 பேரும் மகாலட்சுமியின் அம்மா வீட்டிற்கு சென்று விட்டனர். மகாலட்சுமி வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். மாலையில் பாட்டி வீட்டில் இருந்து வந்த பெண் குழந்தைகள் தந்தை தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து தனது அம்மாவிற்கு தகவல் கொடுத்தனர். அவர் வீட்டிற்கு வந்து கணவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு மகேந்திரனை பரிசோதனை செய்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து மகாலட்சுமி சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.