மனைவி, குழந்தைகளுடன் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி


மனைவி, குழந்தைகளுடன் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி
x

மனைவி, குழந்தைகளுடன் தொழிலாளி தீக்குளிக்க முயன்றதால் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை

மனைவி, குழந்தைகளுடன் தொழிலாளி தீக்குளிக்க முயன்றதால் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தீக்குளிக்க முயற்சி

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்களை அளித்தனர்.

அந்த சமயத்தில் திருவண்ணாமலை தாலுகா கீழ்நாத்தூர் ஏந்தல் கிராமம் (மதுரா) மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கந்தன் (வயது 48) என்பவர் அவரது மனைவி விமலா மற்றும் 2 மகள்கள் ஆகியோருடன் கலெக்டர் அலுவலகத்திற்குள் வந்தார்.

பின்னர் அவர்கள் மறைத்து கொண்டு வந்திருந்த டீசல் கேனை திடீரென எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர்.

கொலை மிரட்டல்

பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கந்தன் கூறியதாவது:-

நான் விவசாய கூலி வேலை செய்து வருகிறேன். எனக்கு சொந்தமான 2 சென்ட் நிலத்தில் ஒரு சென்டில் வீடு கட்டியுள்ளேன். மீதமுள்ள காலி மனையில் அந்த பகுதியை சேர்ந்த சிலர் குப்பைகளை கொட்டி இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயன்று வருகின்றனர்.

இதனை தட்டி கேட்ட என்னையும், என் மனைவி மற்றும் குழந்தைகளையும் அவர்கள் தாக்கினர். இதில் காயம் அடைந்த நாங்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றோம்.

இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எங்களது காலி மனையில் குப்பைகளை கொட்டி கொலை மிரட்டல் விடுத்து தாக்குதல் நடத்திய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து அவர்களை போலீசார் சமாதானம் செய்து குறைதீர்வு கூட்டத்திற்கு மனு அளிக்க அழைத்து சென்றனர்.

இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story