கறம்பக்குடி பகுதியில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரம்
திருக்கார்த்திகையை முன்னிட்டு அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் கறம்பக்குடி பகுதி தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மண் விளக்குகளை ஆண்டுதோறும் புதிதாக வாங்கி பயன்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருக்கார்த்திகை
தமிழ்நாட்டில் இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் திருக்கார்த்திகை தினம் முக்கியமானது ஆகும். ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திர நாளில் இவ்விழா நடை பெறுவது வழக்கம். முருகபெருமானை சிறு வயதில் வளர்த்த கார்த்திகை பெண்களின் சிறப்பை போற்றும் வகையில் திருக்கார்த்திகை தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் வீடுகளில் இரவு நேரத்தில் அகல் விளக்குகள் ஏற்றப்படும். ஒவ்வொருவரும் தங்கள் வசதிக்கு ஏற்ப 11 விளக்குகள் முதல் 501 விளக்குகள் வரை ஏற்றி வைப்பர். சில பகுதிகளில் தொடர்ந்து 3 தினங்கள் அகல் விளக்குகள் ஏற்றப்படும்.
விளக்குகள் தயாரிக்கும் பணி மும்முரம்
இந்த ஆண்டு திருக்கார்த்திகை விழா வருகிற 6-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி கறம்பக்குடி பகுதியில் மண்பாண்டங்களுக்கு பிரசித்திபெற்ற மழையூர், நரங்கியப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் மண் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். சிறிய அகல் விளக்குகள் மட்டுமல்லாமல், அடுக்கு விளக்குகள், அம்மன் உருவ விளக்குகள் என பல விதமான டிசைன்களில் விளக்குகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
வெளியூர்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் கறம்பக்குடி பகுதிக்கு வந்து அகல் விளக்குகளை வாங்கி செல்கின்றனர்.
தற்போது கறம்பக்குடி பகுதியில் மழை இல்லாததால், விளக்குகளை தயாரிப்பது, காயவைப்பது, சூளையில் இடுவது போன்ற பணிகள் தொய்வின்றி நடைபெற்று வருகின்றன.
தொழில் பாதிப்பு
இதுகுறித்து கறம்பக்குடி பகுதியில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கூறுகையில், அகல் விளக்குகள் தயாரிப்பில் எங்களுக்கு உழைப்புக்கு ஏற்ற வருவாய் கிடைப்பது இல்லை. இருப்பினும் ஆன்மிகம், வழிபாடு சார்ந்தது என்பதால் தொடர்ந்து இப்பணியில் ஈடுபட்டு வருகிறோம். கொரோனா பெரும் தொற்று, மழை வெள்ளம் போன்ற காரணங்களால் கடந்த 3 ஆண்டுகள் தொழில் பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டு அகல் விளக்குகள் நல்ல விற்பனை ஆகும் என்ற நம்பிக்கை உள்ளது.
கோரிக்கை
ஒருசிலர் கடந்த ஆண்டுகளில் பயன்படுத்திய பழைய விளக்குகளை பயன்படுத்தி வருகின்றனர். இது ஆன்மிக வழக்கப்படி சரியான வழிபாட்டு முறை ஆகாது.
பொங்கல் நாளில் புது பானையில் பொங்கல் இடுவது போல் திருக்கார்த்திகை நாளில் புதிய மண் அகல் விளக்குகளில் தீபம் ஏற்றுவதே சாலசிறந்தது. எனவே திருக்கார்த்திகை விழா கொண்டாடும் பொதுமக்கள் புதிய அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி வீடுகளில் ஒளிர செய்து, மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்விலும் ஒளிஏற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர். மேலும் மண் விளக்குகளை ஆண்டுதோறும் புதிதாக வாங்கி பயன்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.