பாலகொலா ஊராட்சியை முற்றுகையிட்ட பணியாளர்கள்


பாலகொலா ஊராட்சியை முற்றுகையிட்ட பணியாளர்கள்
x
தினத்தந்தி 21 Oct 2022 12:15 AM IST (Updated: 21 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

நிலுவை சம்பளத்தை வழங்கக்கோரி பாலகொலா ஊராட்சியை பணியாளர்கள் முற்றுகையிட்டனர். அவர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க உதவி இயக்குனர் நடவடிக்கை எடுத்தார்.

நீலகிரி

ஊட்டி

நிலுவை சம்பளத்தை வழங்கக்கோரி பாலகொலா ஊராட்சியை பணியாளர்கள் முற்றுகையிட்டனர். அவர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க உதவி இயக்குனர் நடவடிக்கை எடுத்தார்.

சம்பளம் பாக்கி

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே பாலகொலா ஊராட்சி உள்ளது. இங்கு பணிபுரிந்து வரும் துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள், பம்பு ஆபரேட்டர்கள், பிட்டர்கள், அலுவலக பணியாளர்களுக்கு கடந்த ஆகஸ்டு, செப்டம்பர் மாதத்திற்கான சம்பள தொகை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இது குறித்து மாவட்ட கலெக்டர், உதவி இயக்குனர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி தலைவர் ஆகியோருக்கு மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

இந்தநிலையில் தீபாவளி பண்டிகைக்கு முன்பணம் வழங்க வேண்டும், சம்பள நிலுவையை வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் நேற்று காலை முதல் பாலகொலா ஊராட்சி அலுவலகம் முன்பு பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.

முற்றுகை போராட்டம்

அதன்படி ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் ரகுநாதன் தலைமையிலான 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பாலகொலா ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. அப்போது தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய 2 மாத ஊதியம் மற்றும் பண்டிகை கால முன்பணத்தை உடனடியாக வழங்கட வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஊராட்சிகளின் உதவி இயக்குனர் சாந்தகுமார், பாலகொலா ஊராட்சிக்கு நேரடியாக சென்று பணியாளர்களுக்கு நிலுவை சம்பள தொகையை வழங்க உத்தரவிட்டார். பின்னர் அவர் கூறும்போது, பாலகொலா ஊராட்சியில் துணை தலைவர் ராஜினாமா செய்ததால் சம்பளம் வழங்குவது உள்பட சில பணிகள் மேற்கொள்ள கால தாமதம் ஏற்பட்டு இருக்கிறது. தற்போது உடனடியாக பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க உத்தரவிட்டு பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது என்றார்.


Next Story