பாய்லர் ஆலை தலைமை அலுவலகத்தை ஊழியர்கள் முற்றுகை
பாய்லர் ஆலை தலைமை அலுவலகத்தை ஊழியர்கள் முற்றுகையிட்டனர்.
திருவெறும்பூர்:
திருவெறும்பூர் அருகே உள்ள பாய்லர் ஆலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, மருத்துவமனை வசதி, தீபாவளி மற்றும் உற்பத்தி மேம்பாட்டிற்கான ஊக்கத்தொகை ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என்று நிர்வாகத்திற்கு அந்த ஆலையின் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 29-ந் தேதி உற்பத்தி ஊக்கத்தொகை மற்றும் தீபாவளி ஊக்கத் தொகைக்கான பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையின்போது, கார்ப்பரேட் நிர்வாகமானது ரூ.5 ஆயிரத்தை மட்டுமே வழங்க முடியும் என்று கூறியுள்ளது. இதைத்தொடர்ந்து பாய்லர் ஆலை கார்ப்பரேட் நிர்வாகத்தை கண்டித்து நேற்று பாய்லர் ஆலை அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் ஆலையின் தலைமை அலுவலக கட்டிடமான, 24 அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஏராளமான தொழிற்சங்க நிர்வாகிகள், ஊழியர்கள் கலந்து கொண்டு நிர்வாகத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.