கடைவீதியில் மாட்டு வண்டிகளை நிறுத்தி தொழிலாளர்கள் சாலை மறியல்


கடைவீதியில் மாட்டு வண்டிகளை நிறுத்தி தொழிலாளர்கள் சாலை மறியல்
x

மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதிக்கக்கோரி கடைவீதியில் மாட்டு வண்டிகளை நிறுத்தி தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே ஓடும் அக்னி ஆற்றில் மணல் படுகை மூலம் கிடைக்கும் மணலை அள்ளி கட்டுமான தொழிலுக்கு விற்பனை செய்து டயர் மாட்டு வண்டி தொழிலாளர்கள் வாழ்க்கை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் மாட்டு வண்டி தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

கடைவீதியில் சாலை மறியல்

இந்த நிலையில் குறிச்சி அக்னி ஆற்றில் அரசு மணல் குவாரி திறக்க வேண்டும். அரசு நிர்ணயித்துள்ள ரூ.250 கட்டணத்தில் டயர் மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு மணல் விற்பனை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சிற்றம்பலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த டயர் மாட்டு வண்டி தொழிலாளர்கள் நேற்று 300-க்கும் மேற்பட்ட டயர் மாட்டு வண்டிகளை திருச்சிற்றம்பலம் கடைவீதியில் நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதனால் பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி ஆகிய வழித்தடத்தில் நேற்று 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் பிரபாகர் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் வருகிற 15 நாட்களுக்குள் டயர் மாட்டு வண்டி தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்று பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.


Next Story