விருத்தாசலத்தில் வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி தனியார் நிறுவனம் மீது தொழிலாளர்கள் புகார்
விருத்தாசலத்தில் வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக தனியார் நிறுவனம் மீது தொழிலாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் பகுதியில் வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்பும் ஒரு தனியார் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் குவைத் நாட்டிற்கு டிரைவர், பிட்டர், செக்யூரிட்டி உள்ளிட்ட வேலைக்கு அனுப்புவதாக கூறி 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களிடம் ரூ.50 ஆயிரம், ரூ.60 ஆயிரம், ரூ.70 ஆயிரம் என வாங்கிக்கொண்டு வெளிநாட்டிற்கு அனுப்பாமல் காலம் கடத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஒரு மாதத்திற்கு முன்பே பணத்தை கட்டிய 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்று அந்த அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது அலுவலகம் பூட்டி கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அலுவலக ஊழியர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டனர். ஆனால் தொடர்பு கிடைக்கவில்லை என தெரிகிறது.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் விருத்தாசலம் போலீஸ் நிலையத்திற்கு திரண்டு சென்றனர். பின்னர் அவர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில், எங்களை வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி பணம் மற்றும் பாஸ்போர்ட்டுகளை வாங்கிக் கொண்டு விசா நகலை மட்டும் எங்களிடம் கொடுத்துவிட்டு பாஸ்போர்ட்டை கூரியர் மூலம் அனுப்பி வைத்து விட்டனர். அதன் பிறகு அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. எங்களை போன்ற 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களிடம் பல லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு எங்களை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பாமல் ஏமாற்றி வரும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
மனுவை பெற்றுக்கொண்ட விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதனை ஏற்ற தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.