கூடலூர் கல்வி மாவட்டத்தில் தொழிலாளி மகள் முதல் மதிப்பெண் எடுத்து சாதனை
கூடலூர் கல்வி மாவட்டத்தில் தொழிலாளி மகள் முதல் மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
கூடலூர்
கூடலூர் கல்வி மாவட்டத்தில் பந்தலூர் டியூஸ் மெட்ரிக் பள்ளியில் பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவி ஸ்ரீநிதி 590 மதிப்பெண்கள் பெற்று, கூடலூர் கல்வி மாவட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இதனால் மாணவிக்கு பள்ளிக்கூட முதல்வர் சுசீந்திரநாத் மற்றும் ஆசிரியர்கள் கேக் ஊட்டி வாழ்த்து தெரிவித்தனர். முதலிடம் பிடித்த மாணவியின் தந்தை இலங்கேஸ்வரன் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் தொழிலாளியாகவும், தாயார் செல்வி கடையிலும் பணியாற்றி வருகின்றனர்.
இதேபோல் பந்தலூர் அரசு மேல்நிலை பள்ளியில் மாணவிகள் செப்ரீனாதெஸ்லி கணக்கு பதிவியல் பாடத்தில் 100-ம், பாத்திமா மிஸ்ரியா கணிணி பயன்பாடு பாடத்தில் 100 மதிபெண்களையும் பெற்றுள்ளனர். அவர்களுக்கு பள்ளி தலைமைஆசிரியர் தண்டபாணி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர். இதேபோல் கூடலூர் அரசு மாதிரி மேல்நிலை பள்ளியில் படித்த அனுஜா என்ற மாணவி வேதியலில் 100 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். அனைத்து பாடங்களையும் சேர்த்து மொத்தம் 542 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். மாணவி அனுஜாவின் தாயார் பூ கட்டும் வேளையிலும், தந்தை விஸ்வநாதன் கூலி வேலையும் செய்து வருகின்றனர்.
மேலும் கூடலூர் அருகே பால்மேடு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மனோகரன் என்பவரின் மகள் கூடலூர் பாத்திமா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த நிலையில் பொதுத்தேர்வில் 571 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அவரை கிராம மக்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.