கழிப்பறைகள் கட்டி தர தொழிலாளர்கள் கோரிக்கை
நெல்லியாளம் டேன்டீயில் கழிப்பறைகள் கட்டி தர தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
பந்தலூர்,
பந்தலூர் அருகே நெல்லியாளம் அரசு தேயிலை தோட்டம் (டேன்டீ) ரேஞ்ச் எண்.2 மலை மாரியம்மன் கோவில் அருகே பூமரத்து லைன்ஸ் பகுதியில் தோட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் அரசு மூலம் கட்டி கொடுக்கப்பட்ட குடியிருப்புகளில் குடும்பத்தினருடன் தங்கி தோட்டங்களில் பணிபுரிந்து வருகிறார்கள். குடியிருப்பு பகுதியில் 200 மீட்டர் தொலைவில் தொழிலாளர்களுக்காக கழிப்பறைகள் அமைக்கப்பட்டது. அந்த கழிப்பறைகள் பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. புதர் செடிகள் வளர்ந்தும், பராமரிப்பு இன்றியும் காணப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு தொல்லை அதிகரித்து நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் குடியிருப்பில் இருந்து நீண்ட தொலைவில் கழிப்பறைகள் உள்ளதால், இரவு நேரங்களில் இயற்கை உபாதைகளை கழிக்க செல்ல முடியாமல் தொழிலாளர்கள் அவதிப்படுகின்றனர். இதனால் குடியிருப்புகளுடன் கூடிய கழிப்பறைகள் அமைத்து தர வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, புதிதாக கழிப்பறைகள் அமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.