மூங்கில் முறங்களை மதிப்பு கூட்டும் பணியில் தொழிலாளர்கள்


மூங்கில் முறங்களை மதிப்பு கூட்டும் பணியில் தொழிலாளர்கள்
x

மூங்கில் முறங்களை மதிப்பு கூட்டும் பணியில் தொழிலாளர்கள்

திருவாரூர்

திருவாரூர் அருகே காட்டூரில் மூங்கில் முறங்களை மதிப்பு கூட்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொழிலாக அங்்கீகரித்து வங்கி கடன் வழங்க வலியுறுத்தப்பட்டது.

மூங்கில் முறங்களை மதிப்பு கூட்டும் பணி

வீடுகளில் இல்லத்தரசிகள் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களில் உள்ள கல், தவிடு மற்றும் தூசுக்களை பிரித்து எடுப்பதற்கு மூங்கில் மரத்தால் ஆன முறங்களை பயன்படுத்துகின்றனர். இந்த முறங்கள் பாரம்பரியமாக வீட்டு உபயோகப் பொருளாக இருந்து வருகிறது. "தாக்கவந்த புலியதனை முறத்தினாலே துரத்தினாளே" என்று சங்க இலக்கிய குறிப்பு இருக்கிறது. அந்த அளவுக்கு தமிழர்களின் வாழ்வில் பாரம்பரிய பொருளாக முறம் இருக்கிறது. மூங்கில்களை மெல்லியப்பட்டைகளாக சீவி அதிலிருந்து முறம் தயாரிக்கின்றனர். அதன்படி திருவாரூர் அருகே காட்டூரில் மூங்கில் முறங்களை மதிப்பு கூட்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மூங்கில் மரங்களைக்கொண்டு செய்யப்பட்ட முறங்களை பெண்கள் வீட்டில் உள்ள மாட்டு சாணத்தை கொண்டு மெழுகி பயன்படுத்தி வந்தனர். சாதாரணமாக மூங்கிலால் செய்யப்பட்ட முறத்தை நேரடியாக பயன்படுத்தும் போது ஓரிரு மாதங்களிலேயே வீணாகிவிடும். அதை அவ்வப்போது சாணம் கொண்டு மெழுகி பராமரித்து வந்தால் ஓராண்டுக்கு மேல் பயன்படுத்த முடியும்.

ரூ.120 முதல் ரூ.150 வரை விற்பனை

இதனை மேலும் கூடுதல் ஆண்டுகளுக்கு பயன்படுத்தும் வகையில் தொழிலாளர்கள் மதிப்பு கூட்டி விற்பனை செய்கின்றனர். இந்த மூங்கில் முறங்களில் பேப்பர் மாவுகளைக்கொண்டு பூசி மெழுகி காய வைத்து மதிப்பு கூட்டுகின்றனர். பழைய பேப்பர்களை தண்ணீரில் ஊற வைத்து அவை நன்கு ஊறியவுடன் எடுத்து அரைத்து கூழாக்கி, அதனோடு வஜ்ரம் போன்ற சில பொருட்களையும் சேர்த்து மூங்கில் முறத்தின் மீது பூசி காய வைக்கின்றனர். இப்படி பயன்படுத்தப்படும் மூங்கில் முறங்கள் பல ஆண்டுகளுக்கு வீணாகாமல் உள்ளது. சாதாரணமாக மரத்தால் செய்யப்பட்ட முறங்கள் ரூ.50-ல் இருந்து ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனை பேப்பர் மாவு கொண்டு மதிப்பு கூட்டி விற்பனை செய்கின்றபோது ரூ.120-ல் இருந்து ரூ.150 வரை விற்பனை செய்ய முடிகிறது.

கடன் வழங்க நடவடிக்கை

இந்த பேப்பரால் மதிப்பு கூட்டப்பட்ட முறங்களுக்கு தேவை அதிகரித்துள்ளது. தேவைக்கேற்ற வகையில் மதிப்பு கூட்டிய முறங்கள் தயாரிக்க முடிவதில்லை. ஒரு நாளைக்கு ஒரு நபரால் 25-ல் இருந்து 30 முறங்கள் மட்டுமே மதிப்பு கூட்டப்படுகிறது. ஏழைத்தொழிலாளர்கள் இப்பணியினை மேற்கொள்வதால் கூடுதல் முதலீடு செய்ய முடிவதில்லை. இதை கூடுதலாக செய்யும் வகையில் இதனையும் ஒரு தொழிலாக அங்கீகரித்து வங்கிகளில் கடன் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story