எஸ்டேட் அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகை
சம்பளம் வழங்க கோரி எஸ்டேட் அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.
கூடலூர்,
கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட நியூ ஹோப் பகுதியில் தனியார் எஸ்டேட்டில் ஏராளமான தோட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு 4 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதை கண்டித்து எஸ்டேட் தொழிலாளர்கள் நேற்று காலை 9 மணி முதல் எஸ்டேட் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த தாசில்தார் சித்தராஜ், போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ்குமார் மற்றும் போலீசார் எஸ்டேட் நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொழிலாளர்கள் சார்பில் தொழிற்சங்க நிர்வாகிகள் முகமது கனி, சகாதேவன், விஜயகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர். பின்னர் நாளை (அதாவது இன்று) 2 மாத சம்பளம் வழங்கப்படும் என எஸ்டேட் நிர்வாகம் உறுதியளித்தது. இதையடுத்து மாலை 4 மணிக்கு தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் உறுதியளித்தபடி சம்பளம் மற்றும் போனஸ் வழங்கவில்லை என்றால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என தொழிலாளர்கள் தெரிவித்து உள்ளனர்.