நாகை அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகை
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
முற்றுகை போராட்டம்
ஒப்பந்த நிலுவைத் தொகை, கொரோனா நிதி, ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, ஒப்பந்த பணபலன்கள், ஓய்வூதியம், பணி ஓய்வு, விருப்ப ஓய்வு, உயிரிழந்த போக்குவரத்து தொழிலாளர்களின் ஓய்வு கால பண பலன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் அனைத்து மண்டல தலைமை அலுவலகங்களிலும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.
அதன்படி நாகை புதிய பஸ் நிலையம் அருகே போக்குவரத்து தொழிலாளர்களும், ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களும் நேற்று காலை திரண்டனர்.
தள்ளுமுள்ளு
தொடர்ந்து அங்கிருந்து ஊர்வலமாக நாகை அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்பு வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் போராட்டக்காரர்களை, அலுவலகத்துக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன்காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசாரின் தடுப்பை மீறி, போராட்டக்காரர்கள் அலுவலகத்துக்குள் சென்று பொது மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
அகவிலைப்படி உயர்வு, ஒப்பந்த பணபலங்களை உடனே வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதுகுறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதை தொடர்ந்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்று போக்குவரத்துக்கழக, பணிமனை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.