வீட்டுமனை பட்டா கேட்டு தொழிலாளர்கள் மனு
நெல்லை தாலுகாவில் ஜமாபந்தி: வீட்டுமனை பட்டா கேட்டு தொழிலாளர்கள் மனு
நெல்லை:
நெல்லை தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நடந்து வருகிறது. நேற்று நதிநீர் இணைப்பு திட்ட உதவி கலெக்டர் கார்த்திகேயினி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் மனுக்கள் வாங்கினார். இதில் தாசில்தார் சண்முகசுப்ரமணியன், தேர்தல் பிரிவு தாசில்தார் கந்தப்பன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் லட்சுமி, மண்டல துணை தாசில்தார்கள் குமார், சங்கரன், வருவாய் ஆய்வாளர்கள் மாரித்துரை, சங்கர்கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கொண்டாநகரம் கிராமப்புற தொழிலாளர்கள், அனைத்து இந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர்கள் சங்க மாவட்ட பொறுப்பாளர் கணேசன் தலைமையில் நெல்லை தாலுகா அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், கடந்த 2 ஆண்டுகளாக கொண்டாநகரம் பகுதியை சேர்ந்த ஏழை தொழிலாளர்கள் வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்து வருகிறோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே உடனே நடவடிக்கை எடுத்து இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், என்று கூறியுள்ளனர்.