ரேஷன் கடைகளை மூடி பணியாளர்கள் போராட்டம்
வேலூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளை மூடி பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பணியாற்றி வரும் தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ஜெயச்சந்திரராஜா மீது நேற்று மர்மநபர்கள் தாக்குதல் நடத்தினர். இதைக்கண்டித்து வேலூர் மாவட்டத்தில் நியாயவிலை கடை பணியாளர்கள் பிற்பகல் முதல் கடைகளை மூடி போராட்டம் நடத்தினர். மேலும் அவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாநில செயலாளர் செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஜெயவேலு, செயலாளர் ரமேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் சவுந்திரராஜன் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஏராளமான அரசு நியாய விலை கடை பணியாளர்கள் மாநில தலைவர் மீது தாக்குதல் நடத்திய மர்மநபர்களை கைது செய்யக்கோரி கோஷங்களை எழுப்பினர். மேலும் அவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் அமைப்புச் செயலாளர் குமரவேல் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.