பாரூர் அருகே கோவிலில் 2 தொழிலாளர்கள் அடித்துக்கொலை திருப்பணிக்கு வந்த இடத்தில் பயங்கரம்


பாரூர் அருகே கோவிலில் 2 தொழிலாளர்கள் அடித்துக்கொலை திருப்பணிக்கு வந்த இடத்தில் பயங்கரம்
x
தினத்தந்தி 29 Jun 2023 1:15 AM IST (Updated: 29 Jun 2023 12:12 PM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம்

பாரூர் அருகே கோவில் திருப்பணிக்கு வந்த 2 தொழிலாளர்கள் புதிதாக கட்டப்படும் கோவிலில் அடித்துக்கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் நடந்துள்ளது.

கட்டுமான பணியாளர்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா பாரூர் அருகே பண்ணந்தூரை அடுத்துள்ள சாதிநாய்கன்பட்டி கிராமத்தில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை இடித்து விட்டு புதிதாக கட்டும் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கோவில் திருப்பணிகளை மேற்கொள்ள கும்பகோணத்தை சேர்ந்த ஒருவருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இதையடுத்து பழைய கோவிலை இடித்து விட்டு அங்கிருந்த சாமி சிலை அருகே உள்ள கட்டிடத்தில் வைத்து வழிபாடு நடத்தப்படுகிறது. மேலும் புதிய கோவில் கட்டும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

இதனிடையே இந்த கோவில் திருப்பணியின் ஒரு பகுதியாக சிமெண்டு சிற்பங்கள் செய்யும் வேலைக்காக, கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம் பிச்சாவரம் மேலத்தெருவை சேர்ந்த ராஜ்குமார் (வயது 37), சிதம்பரம் வயலூரை சேர்ந்த சபரிவாசன் (58) ஆகியோர் வந்திருந்தனர். அவர்கள் புதிதாக கட்டப்படும் கோவிலில் சிலை வடிவமைப்பு பணிகளை மேற்கொண்டு வந்தனர்.

ரத்த வெள்ளத்தில் பிணம்

இந்தநிலையில் சபரிவாசன், ராஜ்குமார் ஆகிய 2 பேரும் நேற்று அதிகாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கோவிலில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். இதைகண்டு அந்த பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பொதுமக்கள் பாரூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வராகவன், சிவசந்தர், கார்த்திகா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் நேற்று முன்தினம் இந்த கோவில் திருப்பணிக்கு புதிதாக வந்திருந்த சிதம்பரம் பகுதியை சேர்ந்த கணேசன், கடலூர் மாவட்டம் வன்னியபுரத்தை சேர்ந்த சதீஷ்குமார் ஆகிய 2 பேரிடமும் விசாரணை நடத்தினர்.

போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

இரட்டை கொலை குறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். கொலை நடந்த இடத்தில் கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர்.

மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது ஊருக்குள் சிறிதுதூரம் ஓடிச்சென்று நின்று விட்டது. ெகாலையாளிகள் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இதைத்தொடர்ந்து போலீசார், கொலை செய்யப்பட்ட சபரிவாசன், ராஜ்குமார் ஆகிய 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ராஜ்குமார், சபரிவாசன் ஆகிய 2 பேரும் மதுபோதையில் இருந்ததாகவும், அப்போது அவர்கள் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டதில் இந்த கொலைகள் நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.

இரட்டை கொலை

இந்த இரட்டை கொலை குறித்து பாரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவத்தில் வேறு யாருக்ேகனும் தொடர்பு உள்ளதா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.

கோவில் திருப்பணிக்கு வந்த தொழிலாளர்கள் 2 பேர் புதிதாக கட்டப்படும் கோவிலில் அடித்துக்கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பாரூர் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story