ஒப்புதல் கிடைத்து விரைவில் நடைமுறைக்கு வருகிறது: வங்கிகளை வாரத்துக்கு 5 நாட்கள் மட்டுமே இயக்க திட்டம் ஆதரவும் இருக்கிறது... எதிர்ப்பும் கிளம்புகிறது...


ஒப்புதல் கிடைத்து விரைவில் நடைமுறைக்கு வருகிறது:  வங்கிகளை   வாரத்துக்கு 5 நாட்கள்   மட்டுமே இயக்க திட்டம்  ஆதரவும் இருக்கிறது...   எதிர்ப்பும் கிளம்புகிறது...
x
தினத்தந்தி 2 Nov 2022 12:15 AM IST (Updated: 2 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

வங்கிகளை வாரத்துக்கு 5 நாட்கள் மட்டுமே இயக்க திட்டம் ஒப்புதல் கிடைத்து விரைவில் நடைமுறைக்கு வருகிறது.

கள்ளக்குறிச்சி

வங்கிகள் வாரத்துக்கு 5 நாட்கள் மட்டுமே இயங்குவதற்கான திட்டத்துக்கு ஒப்புதல் கிடைத்து, விரைவில் நடைமுறைப்படுத்த வாய்ப்பு இருக்கிறது. அதற்கு ஆதரவும் இருக்கிறது, எதிர்ப்பும் கிளம்புகிறது.

வங்கி சேவைகள்

பணப் பரிமாற்றங்களுக்கு அடித்தளமாக இருப்பது வங்கிச்சேவைகள் மட்டுமே. முன்பெல்லாம் ஒருவர் வங்கிச் சேவையை பெற வேண்டும் என்றால், நீண்ட நேரம் வங்கிகளில் கால் கடுக்க காத்திருக்கவேண்டிய நிலை இருந்தது. அப்போது வங்கி கணக்குகள் வைத்திருந்தவர்களின் எண்ணிக்கையும் வெகு சொற்பமாக இருந்தது. இது நாளடைவில் மாற்றம் கண்டது. மத்திய-மாநில அரசுகளின் அனைத்து திட்டங்களையும் பெறுவதற்கு வங்கிக்கணக்கு மிக முக்கியமானதாக ஆனது.

இதன் காரணமாகவும், சேமிப்பு பழக்கம் மக்கள் மத்தியில் அதிகரித்ததாலும் இப்போது வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கேற்றாற்போல், வங்கிச் சேவைகளை எளிதாக்கவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிலும் காகிதப் பயன்பாட்டை குறைக்கும் வகையில், டிஜிட்டல் பரிமாற்றங்கள் தான் இப்போதைய வங்கி சேவையில் முதன்மைப்படுத்தப்படுகின்றன.

வாரத்துக்கு 5 நாட்கள் செயல்படும்

என்னதான் டிஜிட்டல் முறையில் சேவைகள் வழங்கப்பட்டாலும், சில தேவைகளுக்கு நேரடியாக வங்கியை அணுகவேண்டிய நிலை இன்றளவும் இருக்கத்தான் செய்கிறது. அந்தவகையில் அனைத்து தரப்பு மக்களும் அவ்வப்போது வங்கியை நாடவேண்டிய நிலை உள்ளது. தற்போது வரை வங்கிகளுக்கு மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும், அரசு விடுமுறை நாட்களிலும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதுதவிர மாதத்தில் 2 மற்றும் 4-வது வார சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

மற்ற அனைத்து நாட்களிலும் மக்கள் வங்கிகளை நேரடியாக அணுகி சேவையை பெற்றுவருகின்றனர். இந்த நிலையில், தற்போது அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளுக்கும் விடுமுறைக்கான ஒப்புதல் பெற முயற்சிகள் நடந்துவருகின்றன.

அதன்படி, இனி வாரத்துக்கு 5 நாட்கள் மட்டுமே வங்கிகள் இயங்கும் நிலை உருவாகியிருக்கிறது. வங்கி ஊழியர்கள் சங்கத்தினர், இந்திய வங்கிகள் சங்கத்துடனான (ஐ.பி.ஏ.) இருதரப்பு ஒப்பந்தத்தில் இதற்கான ஒப்புதல் பெறப்பட உள்ளது. விரைவில் ஒப்புதல் கிடைத்து நடைமுறைக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவே கூறப்படுகிறது. அவ்வாறு சனிக்கிழமை விடுமுறை விடப்பட்டாலும், அந்த 2 வார சனிக்கிழமை வேலைநாட்களை மற்ற நாட்களில் கூடுதல் நேரத்தில் பணி செய்து நிவர்த்தி செய்யப்படும் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தகைய சூழ்நிலையில், இதற்கு தற்போது எழுந்துள்ள ஆதரவும், எதிர்ப்பும் பின்வருமாறு:-

விழுப்புரம் வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ராமகிருஷ்ணன்:-

சர்வீஸ் கட்டணம் அதிகமாகும்

சாதாரணமாக பணம் கட்ட வங்கிக்கு செல்லும்போது ரூபாய் நோட்டு கட்டுகள் 7 கட்டுகளுக்கு மேல் இருந்தால் சர்வீஸ் கட்டணம் செலுத்த வேண்டும். ஏற்கனவே ஒரு நாள் விடுமுறைக்கே முதலீட்டை முன்கூட்டியே செலுத்த வேண்டிய நிலைக்கு வியாபாரிகள் தள்ளப்படுகின்றனர். இப்போது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை என்றால் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் வசூலான தொகையை திங்கட்கிழமைதான் செலுத்த வேண்டியது வரும். இவ்வாறு 3 நாட்கள் வசூல் தொகையை திங்கட்கிழமை ஒரே நேரத்தில் செலுத்தும்போது எங்களுக்கு சர்வீஸ் கட்டணம் அதிகமாகும் என்பதால் பெரும் பாதிப்பு ஏற்படும். அதுமட்டுமின்றி 3 நாட்கள் வசூல் தொகையை கையில் வைத்திருப்பது பாதுகாப்பாகவும் இருக்காது. வழக்கமாக திங்கட்கிழமை என்றாலே வங்கிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். 2 நாட்கள் விடுமுறை விடப்பட்டு திங்கட்கிழமை வங்கிகள் செயல்படும்பட்சத்தில் கிராமப்புற ஏழை, எளிய மக்களும் அரசு திட்டங்கள் மற்றும் கடனுதவி பெற முடிவதில் பெரும் சிரமத்தை சந்திக்க நேரிடும். எனவே வாரத்துக்கு 5 நாட்கள் மட்டுமே வங்கிகள் இயங்கும் என்ற நடைமுறை தேவையற்றது என்றார்.

நீண்டநாள் கோரிக்கை

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த வங்கி அலுவலர் ஒருவர் கூறுகையில், இந்திய ரிசர்வ் வங்கி, எல்.ஐ.சி. போன்று வாரத்துக்கு 5 நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்பட வேண்டும் என்பது எங்களுடைய நீண்ட நாள் கோரிக்கையாகும். இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் பெரும்பாலான அதிகாரிகள், ஊழியர்கள் மகிழ்ச்சியோடு வரவேற்பார்கள். இத்திட்டம் அமலுக்கு வந்தால் திங்கள் முதல் வெள்ளி வரை வங்கிகளின் வேலை நேரம் 30 நிமிடம் அதிகரிக்கப்படும். தற்போது வங்கி சேவைகள் பெரும்பாலும் ஆன்லைன் முறையில் கொண்டு வரப்பட்டபோதிலும், வங்கி சேவைகளை நேரடியாக பெறுவதற்காக வாடிக்கையாளர்கள் பலர் வங்கிகளுக்கு வந்து செல்கின்றனர். வழக்கமாக திங்கட்கிழமை என்றாலே வங்கிகளில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இத்திட்டம் அமலுக்கு வரும்பட்சத்தில் 2 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு திங்கட்கிழமை வங்கிகள் திறக்கும்போது வாடிக்கையாளர்கள் கூட்டம் இன்னும் அதிகரிக்கும், அவர்களுக்கான சேவையை உடனுக்குடன் நிறைவேற்றுவதில் சிக்கலும் ஏற்படும், காலவிரயமும் ஏற்படும். எங்களுக்கு பணிச்சுமை அதிகரிப்பதுபோன்ற உணர்வு ஏற்படும். சனிக்கிழமை விடுமுறை என்பது ஒருபுறம் மகிழ்ச்சி அளித்தாலும் மக்கள் சிரமப்படக்கூடாது என்பதிலும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றார்.

மிகவும் பாதிக்கும்

திண்டிவனம், சஞ்சீவிராயன் பேட்டையை சேர்ந்த வங்கி வாடிக்கையாளர் வெங்கடேசன் கூறும்போது, மாதத்தில் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை என்பது பெரும்பாலான வாடிக்கையாளர்களை மிகவும் பாதிக்கும். இணையதளம் மூலம் பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்கள் ஓரளவுக்குதான் பாதிக்கப்படுவார்கள். கடந்த தீபாவளி பண்டிகை அன்று 4 நாட்கள் விடுமுறை என்பதால் திண்டிவனம் பகுதியில் அனைத்து வங்கி ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் இல்லாததால் வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கு மிகவும் சிரமப்பட்டனர். இணையதளம் மூலமாக பணபரிவர்த்தனை மேற்கொள்ளத் தெரியாதவர்கள், வங்கியில் நேரடி தொடர்பில் உள்ள வாடிக்கையாளர்கள், வியாபாரிகள், விவசாயிகள், மிகவும் பாதிப்புக்குள்ளாவார்கள் என்றார்.

கூடுதலாக பணம் அனுப்ப

செஞ்சி வர்த்தக சங்கத் தலைவர் செல்வராஜ் கூறும்போது, வாரத்தில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்பது வியாபாரிகளுக்கு மிகவும் சிரமத்தை ஏற்படுத்தும். கொள்முதல் செய்யப்படும் பெரும்பாலான நிறுவனங்கள் பணத்தை கட்டிய பிறகு தான் பொருட்களை வியாபாரிகளுக்கு அனுப்பி வைப்பார்கள். அவ்வாறு பணம் கட்ட வேண்டும் என்றால் கூகுள் பே மூலம் ரூ.1 லட்சம் மட்டுமே அனுப்ப முடியும். இதற்கு மேல் கூடுதலாக பணம் அனுப்ப வேண்டும் என்றால் வங்கியைத்தான் நாட வேண்டும். எனவே 2 நாள் விடுமுறை என்பதை தவிர்த்து தற்போதைய நிலையே தொடர ஏற்பாடு செய்தால் வியாபாரிகளுக்கு நன்றாக இருக்கும் என்றார்.

ஆன்லைன் பண பரிவர்த்தனை

தியாகதுருகம் எறஞ்சியை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் பழனிவேல்:-

வாரத்திற்கு 2 நாட்கள் வங்கிகள் விடுமுறை விடப்பட்டால் பொதுமக்களிடம் பணப்பரிவர்த்தனை மிகவும் பாதிக்கப்படும். மேலும் ஏ.டி.எம். மையங்களுக்கு சென்றால் அங்கு போதிய அளவு பணம் இருப்பதில்லை, ஒரு சில இடங்களில் ஏ.டி.எம் எந்திரங்கள் பழுதடைந்து காணப்படுகின்றன. அவசரத் தேவைக்கு வாடிக்கையாளர்களர்கள் வங்கிகளில் தனிநபர் கடன் மற்றும் நகை கடன் பெறுவதற்கும், அவ்வாறு பெற்ற கடனை உரிய நேரத்தில் வங்கியில் செலுத்த இயலாத நிலை ஏற்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு வட்டி அதிகரிக்கிறது. இதேபோல் வார நாட்களில் வேலைக்குச் செல்லும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை அன்று வங்கிகளுக்கு சென்று பணப்பரிவர்த்தனை செய்கின்றனர். அவ்வாறு செய்ய இயலாத நிலை ஏற்படும்.

மேலும் ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் ஒரு சிலர் மட்டுமே பணம் பரிவர்த்தனை செய்து வருகின்றனர். இந்நிலையில் அனைவரும் ஆன்லைன் பண பரிவர்த்தனைக்கு மாறிய பிறகு வாரத்திற்கு 2 நாள் வங்கிகளுக்கு விடுமுறை என்பதை நடைமுறைப்படுத்தலாம்.

வட்டிக்கடையை நோக்கி செல்ல நேரிடும்

கள்ளக்குறிச்சி சேர்ந்த சமூக ஆர்வலர் இளையராஜா:-

நாட்டில் வங்கியின் வேலை நாட்கள் வாரத்திற்கு 5 நாட்கள் என நடைமுறைக்கு வந்தால் நாட்டின் வளர்ச்சி மற்றும் மக்களின் வளர்ச்சியும் பாதிக்கப்படும். தற்போது இரண்டாவது சனிக்கிழமை தவிர வாரத்திற்கு ஆறு நாட்கள் வங்கிகள் இயங்கி வருகிறது. இப்படி 6 நாட்கள் இயங்கும் நிலையில் மக்கள் தங்களின் பண தேவைகளுக்காக வங்கிகளுக்கு நகைக்கடன்,விவசாய கடன்,தொழில்கடன் மற்றும் பல்வேறு கடன்களுக்கு சென்றால் அரை நாட்கள் முதல் முழு நாட்கள் வரை காத்திருக்கும் நிலை உள்ளது.

இந்த சூழலில் 5 நாட்கள் பணி என்கிற நடைமுறை வந்தால், மக்கள் மிகவும் சிரமப்படுவார்கள். நகை அடகு போன்ற தேவைக்கு எனவே தனியார் நிறுவனங்கள் மற்றும் அடகு நகைகடையை நோக்கி செல்ல நேரிடும். இதனால் மக்களுக்கு தான் பெரும் இழப்பாகும். எனவே வாரத்திற்கு 6 நாட்கள் அல்லது தற்போது நடைமுறையில் இருக்கும் நாட்களில் வங்கி செயல்படவேண்டும் என கூறினார்.


Next Story