ஊட்டியில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுாியும்நகராட்சி ஊழியர்களை இடமாற்றம் செய்ய வேண்டும்-கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் நகராட்சி அலுவலர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஊட்டி
10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் நகராட்சி அலுவலர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
நகராட்சி கூட்டம்
ஊட்டி நகராட்சி மாதாந்திர கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு தலைவர் வாணீஸ்வரி தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் காந்திராஜன் முன்னிலை வகித்தார். கூட்டம் தொடங்கியதும் மார்க்கெட் கடை வாடகை விவகாரம் குறித்து கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர்.
முஸ்தபா: நகராட்சி மார்க்கெட் கடை வியாபாரிகளை அதிகாரிகள் மிரட்டுகின்றனர். தினந்தோறும் கடை முன்பு 10-க்கும் மேற்பட்ட நகராட்சி ஊழியர்கள் சென்று, கந்து வட்டி வசூலிப்பது போல வாடகை கேட்கின்றனர். மார்க்கெட் வியாபாரிகள் மட்டும் தான் வாடகை பாக்கி வைத்துள்ளனரா? பல அரசு துறைகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் வாடகை பாக்கி வைத்துள்ளனர். அவற்றை அதிகாரிகள் வசூலித்து விட்டார்களா? யார்? யார் எவ்வளவு தொகை பாக்கி வைத்துள்ளனர் என்ற பட்டியலை மன்றத்தில் வைக்க வேண்டும்.
ஜார்ஜ்: வார்டுகளில் நிதி இல்லாததால் வார்டுகளில் எவ்வித வளர்ச்சிப் பணியும் நடப்பதில்லை என்று கூறப்படுகிறது. நகரில் ஆக்கிரமிப்புகளால் மழை காலங்களில் வெள்ளம் வெளியேற வழியில்லாமல் சாலைகளில் ஓடுகிறது.
பணியிட மாற்றம் செய்ய வேண்டும்
பல நகராட்சி அலுவலர்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக இங்கேயே பணிபுரிகின்றனர். இதனால், பணியில் அலட்சியம் காட்டுகின்றனர். எனவே, அத்தகைய அலுவலர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். இதே கோரிக்கையை மற்ற கவுன்சிலர்களும் முன்வைத்தனர்.
அபுதாஹீர்: படகு இல்லத்திலிருந்து காந்தல் செல்லும் சாலையில் பாதாள சாக்கடையில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் சாலையிலேயே ஓடுகிறது. இதற்கு காரணம் அப்பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் நிர்வாகம், பாதாள சாக்கடை இணைப்பு பெறாமல், அனுமதியின்றி ஓட்டல் கழிவுநீரை நகராட்சி பாதாள சாக்கடை தொட்டியில் மோட்டார் மூலம் வெளியேற்றுகிறது. இதனால், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி சாலையில் ஓடுகிறது.
ரவி: ஒப்பந்ததாரர்கள், தங்கள் நகராட்சியில் பணம் நிலுவையில் உள்ளதால், வார்டுகளில் பணிகள் செய்ய முடியாது என கூறுகின்றனர்.
உமா: 1-வது வார்டில் நீண்ட காலமாக உள்ள தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படுமா?
ரஜினிகாந்த்: சேரிங்கிராஸ் பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள 20 அடி உயர கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
66 தீர்மானங்கள் நிறைவேற்றம்
துணை தலைவர் ரவிகுமார்: கழிவுநீர் அடைப்பு, செடிகள் அகற்றம் போன்ற பணிகளுக்கு தேவையான உபகரணங்கள் நகராட்சி வசம் இல்லை. மார்க்கெட் கடை வாடகை விவகாரம், ஒப்பந்ததாரர்களுக்கு தொகை வழங்கப்படாத விவகாரம் ஆகியவற்றால் அரசுக்கு அவப்பெயர் உருவாகிறது.
ஊழியர்கள் தங்குதற்காக நகராட்சி குடியிருப்புகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்குவது சரி. ஆனால், நகராட்சி மாதிரி குடியிருப்புகளை கட்டி, அவற்றை மக்களுக்கு வாடகைக்கு கொடுத்து விட்டு, தற்போது அவற்றை காலி செய்ய சொல்வது ஏற்புடையது அல்ல.
நகராட்சியில் கட்டப்படும் கட்டிடங்களுக்கு நகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றி, மாவட்ட நிர்வாகத்திடம் தீர்மானத்தை அனுப்ப வேண்டும். இதைத்தொடர்ந்து விவாதங்களுக்கு பிறகு மன்றத்தின் ஒப்புதலுக்காக வைக்கப்பட்ட 66 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.