வேலூர் மாநகராட்சியில் பணிகள் சரியாக நடைபெறுவதில்லை


வேலூர் மாநகராட்சியில் பணிகள் சரியாக நடைபெறுவதில்லை
x

வேலூர் மாநகராட்சியில் குடிநீர், பாதாள சாக்கடை, சாலை வசதி உள்ளிட்ட எந்த பணிகளும் சரியாக நடைபெறுவதில்லை என்று கவுன்சிலர்கள் சரமாரியாக குற்றம் சாட்டினர்.

வேலூர்

மாநகராட்சி கூட்டம்

வேலூர் மாநகராட்சி கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. மேயர் சுஜாதா தலைமை தாங்கினார். துணை மேயர் சுனில்குமார், கமிஷனர் ரத்தினசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டு தங்களது வார்டுகளில் செய்ய வேண்டிய பணிகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.

அதன் விவரம் வருமாறு:-

அன்பு:- எனது வார்டு பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகளை என்னிடம் கூறுகிறார்கள். இதை யாரிடம் முறையிடுவது என்று தெரியவில்லை. எனது வார்டில் 117 தெருக்கள் உள்ளது. அதில் 50 தெருக்களில் மழைநீர் கால்வாய் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. ஒரு குண்டு பல்பு கூட எனது வார்டில் போடவில்லை.

முன்னுரிமை அடிப்படையில்

மேயர் சுஜாதா:- தற்போது 3,650 மின் விளக்குகள் அமைக்க நிர்வாக ஒப்புதல் கிடைத்து உள்ளது. அனைத்து வார்டுகளிலும் விரைவில் மின்விளக்குகள் அமைக்கப்படும்.

கமிஷனர் ரத்தினசாமி:- கோரிக்கைகள் பற்றி மாநகராட்சி அலுவலகத்தில் மனு கொடுங்கள். நிதி நிலைமைக்கு ஏற்ப முன்னுரிமை அடிப்படையில் அவற்றை சரி செய்து தருகிறோம்.

சரவணன்:- வேலூர் புதிய பஸ்நிலையத்தின் பின்புறப்பகுதியில் நுழைவு வளைவு அமைக்க வேண்டும். அதற்கு முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதி பெயரை வைக்க வேண்டும். சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்துக்கு கலைஞர் பெயர் சூட்ட வேண்டும். வார்டில் குடிநீர் தேவையை தீர்க்க வேண்டும்.

கவுன்சிலர் அதிகாரம் என்ன?

புஷ்பலதா:- முதலாவது மண்டலக்குழு தலைவரான என்னால் வார்டு மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்ய முடியவில்லை. எங்களின் அதிகாரம் தான் என்ன?. காட்பாடி பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. இனிமேல் வார்டுகளில் நாய்கள் பிடிக்கும்போது அந்த வார்டு கவுன்சிலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பல பகுதிகளில் சரியாக குடிநீர் வருவதில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

கமிஷனர்:- மண்டலக்குழு தலைவர், கவுன்சிலர் ஆகியோருக்கான அதிகாரங்கள் குறித்து புத்தகம் வழங்கப்படும். ஒவ்வொரு வார்டுகளிலும் தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் நாய்கள் பிடிக்கப்பட்டு, அவற்றுக்கு கருத்தடை செய்யப்படுகின்றன. அந்த நாய்கள் மீண்டும் பிடித்த இடத்திலேயே கொண்டு விடப்படுகின்றன. அதனால் நாய்கள் குறைந்தது போன்று தெரிவதில்லை.

அலுவலர்கள் பற்றாக்குறை

கணேஷ்சங்கர்:- சத்துவாச்சாரி பகுதியில் நாய், பன்றிகள் இதுவரை பிடிக்கவில்லை. அவற்றால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மாநகராட்சி அலுவலர்கள் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிதாக அமைக்கப்பட்ட எல்.இ.டி. தெருவிளக்குகள் பல இடங்களில் எரிவதில்லை.

மாநகர் நலஅலுவலர் கணேஷ்:- முதற்கட்டமாக 60 வார்டுகளில் தலா 20 நாய்கள் வீதம் 1,200 நாய்களுக்கு கருத்தடை செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மீதமுள்ள நாய்களுக்கும் அடுத்தக்கட்டமாக கருத்தடை செய்யப்படும். சாலைகளில் சுற்றித்திரியும் பன்றி, மாடு உள்ளிட்ட கால்நடைகளின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

ஊதியம் வழங்கப்படவில்லை

ஏழுமலை:- குடிநீர் ஆபரேட்டர்களுக்கு 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. அதனை உடனடியாக வழங்க வேண்டும். சரியாக ஊதியம் வழங்காத ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேயர்:- ஊதியம் மாதந்தோறும் சரியாக வழங்க ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்படும்.

சண்முகம்:- எனது வார்டில் 11 ஆழ்துளை மின்மோட்டார் பழுதடைந்துள்ளது. அவற்றை சரிசெய்ய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் பொதுமக்களுக்கு சரியாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. வார்டில் எவ்வித பணிகளும் சரியாக நடைபெறுவதில்லை.

கமிஷனர்:- ஆழ்துளை கிணறு மின்மோட்டார்களை சரி செய்வதற்கான ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. விரைவில் அவை சரி செய்யப்படும்.

80 சதவீதம் பணிகள் நிறைவு

சுமதி:- சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் தேர் திருவிழா இந்த மாத இறுதியில் நடைபெற உள்ளது. ஆனால் அங்குள்ள சாலைகள் சீரமைக்கப்படவில்லை. குறிப்பாக பள்ளி திறப்பதற்கு முன்பு பள்ளிக்கூட தெருவில் சாலை அமைக்க வேண்டும். பாலாற்றங்கரையில் கலெக்டர் அலுவலகம் பின்புறம் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்.

மேயர்:- 18-வது வார்டில் 80 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள பணிகள் விரைவில் முடிக்கப்படும். பள்ளிக்கூட தெருவில் பாதாள சாக்கடை பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. விரைவில் அங்கு சாலை அமைக்கப்படும்.

கங்கா:- எனது வார்டில் உள்ள பொது கழிப்பறையை சீரமைக்கக்கோரி ஓராண்டுகள் ஆகியும் இதுவரை நடவடிக்கை இல்லை. பில்டர்பெட் ரோடு மேட்டு பகுதியில் 5 தெருக்களில் கழிவுநீர் கால்வாய் அமைக்கவில்லை. மாநகராட்சி ஊழியர்கள் சரியாக பணிகள் செய்வதில்லை. கவுன்சிலரை அவர்கள் மதிப்பதில்லை. எனது வார்டில் பழுதடைந்த 5 ஆழ்துளை கிணற்றை சரி செய்யவில்லை.

கமிஷனர்:- பொதுகழிப்பறை சீரமைப்பதற்கான பணிகள் ஓரிரு நாளில் தொடங்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.


Next Story