மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியின் கீழ் நடைபெற்று வரும் பணிகள்


மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியின் கீழ் நடைபெற்று வரும் பணிகள்
x

ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை

ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஆய்வு செய்தார்.

துணைத்தலைவர் ஆய்வு

ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியத்தில் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியின் கீழ் பல்வேறு துறைகள் மூலம் நடைபெற்று வரும் பணிகளை மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.

கோவிலூர் வனத்துறை நடுநிலைப் பள்ளி, பெருங்காட்டூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அமட்டன் கொல்லை கஸ்தூரிபாய் காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப்பள்ளி ஆகியவற்றில் அடிப்படை வசதிகள், மாணவர்களின் விவரம், உணவின் தரம், கழிவறை பயன்பாடு, கூடுதலாக தேவைப்படும் வசதிகள் குறித்து அவர் ஆய்வு செய்தார்.

மேல்நெல்லிமரத்தூர் கிராமத்தில் தோட்டக்கலை துறை மூலம் நடப்பட்டு உள்ள சில்வர் ஒக் மரம் மற்றும் மிளகு கொடி வளர்ப்பு ஆகியவற்றை பார்வையிட்டு விவசாயிகளிடம் உரையாற்றினார்.

பாலம் கட்டும் பணி

அத்திப்பட்டு கிராமத்தில் மகளிர் திட்டம் மூலம் இயங்கும் வேளாண் உற்பத்தியாளர்கள் குழுவினால் மதிப்பு கூட்டல் மூலம் தயாரிக்கப்பட்ட சாமை, தேன், புளி ஆகிய அலகுகளை பார்வையிட்டு மூலப்பொருட்கள் பெறும் விவரம் மற்றும் விற்பனை விவரங்களை கேட்டறிந்தார்.

வீரப்பனூர் ஊராட்சி மேல்வெள்ளிதான்கொட்டாய் செல்லும் வழியில் பீமன் நீர்வீழ்ச்சி கால்வாயின் குறுக்கே ரூ.50 லட்சம் மதிப்பில் ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் பாலம் கட்டும் பணியையும் அவர் பார்வையிட்டார்.

தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் தலைமையாசிரியர்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

ஆய்வின் போது மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதிசீனிவாசன், ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட திட்டக்குழு அலுவலர் அறவாழி, புள்ளியியல் அலுவலர் சரவணன், மாவட்ட ஊராட்சி அலுவலக கண்காணிப்பாளர் பரிமேழலகன், ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஜீவாமூர்த்தி, துணைத் தலைவர் மகேஸ்வரி செல்வம் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story