விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்ட அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம்:ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களின் தேவைகள் உடனுக்குடன் நிறைவேற்றம்அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தகவல்


விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்ட அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம்:ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களின் தேவைகள் உடனுக்குடன் நிறைவேற்றம்அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தகவல்
x
தினத்தந்தி 26 July 2023 12:15 AM IST (Updated: 26 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களின் தேவைகள் உடனுக்குடன் நிறைவேற்றம் செய்யப்படுகிறது என்று விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்ட அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கூறினார்.

விழுப்புரம்

ஆய்வுக்கூட்டம்

ஆதிதிராவிடர் நலத்துறை திட்டங்களின் செயலாக்கம் தொடர்பாக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்ட அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் விழுப்புரத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமை தாங்கினார்.

உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கலெக்டர் பழனி வரவேற்றார்.

கூட்டத்தில், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்களில் முதல்-அமைச்சரின் முகவரி துறையிலிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது தீர்வு காணப்பட்ட விவரம், ஆதிதிராவிடர் பள்ளிகள், விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்கள் விவரம், தேர்ச்சி விகிதம், வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின்கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீருதவிகள் வழங்கப்பட்ட விவரம், தொகுப்பு வீடுகள் வழங்கப்பட்ட விவரம், துறை ரீதியாக பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அரசு நலத்திட்ட உதவிகள் விவரம் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதைத்தொடர்ந்து அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கூறியதாவது:-

வாழ்வாதாரம் மேம்படும்

தமிழ்நாடு முதல்-அமைச்சர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு அரசால் வழங்கப்படும் அனைத்து நலத்திட்டங்களும் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். தாட்கோ மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படுவதோடு அவர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட்டு, பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. எனவே ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு அரசால் வழங்கப்படும் அனைத்து நலத்திட்டங்களும் தடையின்றி கிடைப்பதை அனைத்துத்துறை அதிகாரிகளும் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் பொன்முடி

முன்னதாக அமைச்சர் பொன்முடி பேசுகையில், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி தமிழ்நாட்டில் அனைவரும் சமம் என்ற நிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கி வருகிறார். அதுபோல் ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்திற்காக எண்ணற்ற நலத்திட்டங்களை வழங்கி வருகிறார். எனவே நலத்திட்ட உதவிகள் கிடைக்கப்பெற்றவர்கள் அனைவரும் இதனை நல்ல முறையில் பயன்படுத்தி தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

அமைச்சர் செஞ்சி மஸ்தான்

அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசுகையில், ஒவ்வொரு துறையில் நிறைவேற்றப்படும் திட்டங்கள் அனைத்தும் கடைகோடி மக்களை சென்றடைய வேண்டும் என்பதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருந்து வருகிறார். குறிப்பாக பழங்குடியின மக்கள் தொடர்ந்து கல்வி பயில வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் அவர்களுக்கான இனச்சான்றிதழ்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. படித்து முடித்த ஆதிதிராவிட மாணவ- மாணவிகள் சுயமாக தொழில் புரிந்திடும் வகையிலும், தொழில்முனைவோர்களை உருவாக்கிடும் வகையிலும், மானியத்துடன் கடனுதவிகளை வழங்கி சுயமாக தொழில் தொடங்க வழிவகை செய்யப்படுகிறது.

எனவே நலத்திட்ட உதவிகள் பெற்ற அனைவரும் நல்ல முறையில் இதனை பயன்படுத்திக்கொள்வதோடு இதுகுறித்த விழிப்புணர்வையும் மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்றார்.

நலத்திட்ட உதவிகள்

இதனை தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்தில் தீண்டாமை கடைபிடிக்காத மற்றும் நல்லிணக்கத்துடன் வாழும் கிராமத்திற்கு பரிசு வழங்கும் திட்டத்தின்கீழ் தென்னமாதேவி ஊராட்சிக்கு ரூ.10 லட்சத்துக்கான பரிசுத்தொகையும் மற்றும் 522 பயனாளிகளுக்கு ரூ.8 கோடியே 18 லட்சத்து 35 ஆயிரத்து 753 மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் வழங்கினர்.

இக்கூட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை அரசு செயலாளர் லட்சுமிபிரியா, ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் ஆனந்த், துரை.ரவிக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன், காவல்துறை தலைவர் (சமூக நீதிமன்றம் மனித உரிமைகள் பிரிவு) ரூபேஷ்குமார் மீனா, தாட்கோ நிர்வாக இயக்குனர் கந்தசாமி, தாட்கோ தலைவர் மதிவாணன், பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், துணைத்தலைவர் ஷீலாதேவி சேரன், மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலர் ஹரிதாஸ், தாட்கோ மாவட்ட மேலாளர் மணிமேகலை, நகராட்சி ஆணையர் ரமேஷ், விழுப்புரம் தாசில்தார் வேல்முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

புதிய கட்டிடம் கட்டப்படும்

முன்னதாக அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் விழுப்புரம் ஆதிதிராவிடர் நல மாணவிகள் விடுதியை நேரில் பார்வையிட்டு அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

கூட்டம் முடிந்ததும் அமைச்சர் கயல்விழி செல்வராஜ், நிருபர்களிடம் கூறுகையில், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள், விடுதிகள் 30 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இருந்து சீரமைக்காமல் இருந்தால் அவற்றை இடித்து விட்டுபுதியதாக கட்டிடம் கட்டித்தருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Next Story