மண்டைக்காடு அருகே ஒர்க்ஷாப் உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை
வெளிநாட்டில் உள்ள மனைவியுடன் ஏற்பட்ட தகராறால் ஒர்க்ஷாப் உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மணவாளக்குறிச்சி:
வெளிநாட்டில் உள்ள மனைவியுடன் ஏற்பட்ட தகராறால் ஒர்க்ஷாப் உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஒர்க்ஷாப் உரிமையாளர்
மண்டைக்காடு அருகே உள்ள அழகன்பாறை தட்டான்விளையை சேர்ந்தவர் வளன் கிளீட்டஸ் (வயது 42). இவர் திங்கள்நகரில் ஒர்க் ஷாப் நடத்தி வந்தார். இவருடைய மனைவி அருள் ஷோபினி. இவர்களுக்கு 6 வயது மகள் இருக்கிறாள். அருள் ஷோபினி சவூதி அரேபியாவில் நர்சாக பணி புரிந்து வருகிறார். இதனால் குழந்தையை அருள் ஷோபினியின் தாயார் பராமரித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வளன் கிளீட்டஸ் மனைவியுடன் செல்போனில் பேசினார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் வளன்கிளீட்டஸ் மனைவியுடன் செல்போனில் பேசுவதை நிறுத்தி விட்டார்.
தூக்குப்போட்டு தற்கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் படுக்கையறை மின் விசிறியில் வளன் கிளீட்டஸ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி மண்டைக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வளன் கிளீட்டஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் ஒர்க்ஷாப் உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.