ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம்:மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை அடிக்கல் நாட்டுகிறார்
ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகத்துக்கு மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை அடிக்கல் நாட்டுகிறார்.
ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று (சனிக்கிழமை) அடிக்கல் நாட்டுகிறார்.
அருங்காட்சியகம்
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கடந்த 2020-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்து இருந்தார். இதையடுத்து ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு அகழாய்வு பணி தொடங்கியது. இதில் 100-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் மற்றும் ஏராளமான பழங்கால தொல்லியல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. முதுமக்கள் தாழிகளை திறந்து அவற்றில் உள்ள பொருட்களை ஆவணப்படுத்தும் பணியும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (சனிக்கிழமை) காலையில் நடக்கிறது.
மந்திரி மந்திரி நிர்மலா சீதாராமன்
இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு அருங்காட்சியகம் அமைக்க அடிக்கல் நாட்டுகிறார். விழாவில் பங்கேற்பதற்காக அவர் நெல்லையில் இருந்து காலை 9 மணிக்கு ஆதிச்சநல்லூர் வருகிறார். அவரை மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் வரவேற்கின்றனர்.
தொடர்ந்து மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் அருங்காட்சியகம் அமைக்கப்படும் இடத்தையும், அருங்காட்சியகத்தின் மாதிரியையும் பார்வையிடுகிறார்.
சைட் மியூசியம்
மேலும், ஆதிச்சநல்லூரில் அகழாய்வு நடைபெற்ற 'பி' மற்றும் 'சி' பகுதியில் அகழாய்வு குழிகளுக்கு மேல் கண்ணாடி தளம் அமைத்து, அங்கு கிடைத்த பொருட்களை காட்சிப்படுத்தி (சைட் மியூசியம்) மக்கள் பார்வையிட வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
அந்த பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. அதனையும் அவர் பார்வையிடுகிறார். பின்னர் அருங்காட்சியகம் அமைக்க அடிக்கல் நாட்டி பேசுகிறார். விழாவில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.