உலகத் தாய்மொழி நாள் விழா: 18 தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை ஆணை


உலகத் தாய்மொழி நாள் விழா: 18 தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை ஆணை
x

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், உலகத் தாய்மொழி நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில், வயது முதிர்ந்த 18 தமிழறிஞர்களுக்கு உதவித் தொகைக்கான ஆணைகள் வழங்கப்பட்டது.

சென்னை,

உலகத் தாய்மொழி நாளையொட்டி, தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நேற்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நீதிபதி பஷீர் அகமது சயீத் மகளிர் கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் விழா நடைபெற்றது. விழாவுக்கு வந்தவர்களை தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் அவ்வை அருள் வரவேற்றார். கல்லூரி தாளாளர் பைசூர் ரகுமான் சயீத், கல்லூரி முதல்வர் அப்துல் அஜீஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

விழாவில், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவரும், பட்டிமன்ற பேச்சாளருமான ஐ.லியோனி தலைமையில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. தொடர்ந்து, கவிஞர் மு.மேத்தா தலைமையில் பாட்டரங்கமும், வக்கீல் மா.ப.நாதன் தலைமையில் இளையோர் அரங்கமும் நடைபெற்றது.

மொழி குறித்து கவனம் தேவை

பின்னர், மாலையில் நடைபெற்ற நிறைவு நிகழ்ச்சியில், பேராசிரியர் பர்வீன் சுல்தானா, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன இயக்குனர் இரா.சந்திரசேகரன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் செயலாளர் இரா.செல்வராஜ் ஆகியோர் பேசினார்கள்.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் செயலாளர் இரா.செல்வராஜ் பேசும்போது, "தாய்மொழியின் அவசியமும், அருமையும் நமக்கு நன்கு தெரியும். ஏனெனில், நம் தாய்மொழியைக் காப்பாற்றுவதற்காக நாம் பெரும் போராட்டம் நடத்தி மொழி உணர்வை வெளிப்படுத்தி இருக்கிறோம். சில நூறு மொழிகள் மாத்திரமே பொதுமக்கள் பயன்பாட்டிலும், கல்வியைப் பயிற்றுவிப்பதிலும் வழக்கில் உள்ளன. அதிலும் நூற்றுக்கும் குறைவான மொழிகளே நமது உலகில் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய சூழ்நிலையில், நமது மொழி குறித்து நமக்கு எவ்வளவு கவனம் தேவை என்பதையே இந்த நாளில் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்" என்றார்.

உதவித்தொகை

பின்னர் அவர், நீதிபதி பஷீர் அகமது சயீத் மகளிர் கல்லூரிக்கு தாய்மொழி நாள் நினைவு கோப்பையினை வழங்கியதுடன், வயது முதிர்ந்த 18 தமிழறிஞர்களுக்கு உதவித் தொகைக்கான ஆணைகளையும் வழங்கினார். மேலும், சிறந்த நூலுக்கான பரிசுகளையும் அவர் கொடுத்தார்.

நிறைவாக, தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் தே.ஜெயஜோதி நன்றி கூறினார்.


Next Story