துபாயில் உலக தமிழ் திறனாய்வாளர்கள் மாநாடு
நவம்பர் மாதம் 9, 10, 11-ந் தேதிகளில் துபாயில் உலக தமிழ் தொழிலதிபர்கள், திறனாய்வாளர்கள் மாநாடு நடைபெறுகிறது என்று அருட்பணியாளர் ஜெகத் கஸ்பார் கூறினார்.
நாகர்கோவில்:
நவம்பர் மாதம் 9, 10, 11-ந் தேதிகளில் துபாயில் உலக தமிழ் தொழிலதிபர்கள், திறனாய்வாளர்கள் மாநாடு நடைபெறுகிறது என்று அருட்பணியாளர் ஜெகத் கஸ்பார் கூறினார்.
3 நாள் மாநாடு
நாகர்கோவிலில் எழுமின் (தி ரைஸ்) அமைப்பின் நிறுவன தலைவர் அருட்பணியாளர் ஜெகத் கஸ்பார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எழுமின் அமைப்பு நடத்தும் 9-ம் உலக தமிழ் தொழிலதிபர்கள், திறனாய்வாளர்கள் மாநாடு துபாயில் வருகிற நவம்பர் மாதம் 9, 10, 11-ந் தேதிகளில் நடைபெறுகிறது. அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, ஜெர்மனி, ஸ்வீடன், நார்வே, போர்ச்சுகல், தாசானியா, கென்யா, மலேசியா, சிங்கப்பூர், அனைத்து அரபு -வளைகுடா நாடுகள் உள்ளிட்ட 50-க்கும் மேலான உலக நாடுகளில் இருந்து வெற்றித் தமிழ் தொழிலதிபர்கள், திறனாளர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.
பல நூறு கோடி ரூபாய் மதிப்புடைய தொழில், வணிக பரிமாற்றங்கள், ஒப்பந்தங்கள் இந்த மாநாட்டின் போது தமிழரிடையே நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகம் தழுவிய இறக்குமதி தொழிலில் ஈடுபட்டிருக்கும் தமிழர்களை இந்த மாநாட்டில் சந்திக்கலாம். அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் தகவல் தொழில் நுட்பத்துறையில் வெற்றிக்கொடி நாட்டி வரும் தமிழர்கள் சுமார் 25 பேர் துபாய் மாநாட்டுக்கு வருகிறார்கள்.
வருமானவரி
தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த தொழில், வணிக வாய்ப்புகள் அரபு வளைகுடா நாடுகளிலும் இப்போது சிறப்பாக உள்ளது. எனவே இத்துறை சார்ந்தவர்களுக்கு துபாய் மாநாடு நல்ல பயன் தருவதாக அமையும். உயர் நிலை, இடை-கடை நிலை வேலையாட்கள் பல்லாயிரக்கணக்கில் தேவைப்படுகிறார்கள். எனவே மனிதவளம் சார்ந்த துறையினருக்கு இந்த மாநாட்டில் நல்ல வாய்ப்புகள் சாத்தியப்படும். அரபு வளைகுடா பரப்பில் வெற்றி சாதனை புரிந்தவர்களையும், சமூக நற்பணிகள் பெரிதாக செய்தவர்களையும் சிறப்பிக்கும் உயர் விருது விழா வளைகுடா சங்கமத்தின் போது நடைபெறும். ஐக்கிய அமீரக நாடுகளில் தொழில் செய்கிறவர்கள் தனிநபர் வருமானவரி கட்ட வேண்டியதில்லை. வணிக வரி, ஜி.எஸ்.டி. வரிகளும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது எழுமின் அமைப்பின் தலைவர் மனோகர், துணைத் தலைவர் சுகதேவ், துபாய் மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் ஜோஸ் மைக்கேல் ராபின், சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.