உலக யோகா தினம்
நாகையில் உலக யோகா தினத்தையொட்டி யோகாசன பயிற்சி நடந்தது.
வெளிப்பாளையம்:
உலக யோகா தினத்தை முன்னிட்டு முதலாவது கடற்கரைச் சாலையில் உள்ள நாகை சுங்கத்துறை உதவி ஆணையர் அலுவலகம் முன்பு யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சுங்கத்துறை உதவி ஆணையர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார். இதில் சுங்கத்துறை அலுவலர்கள், பணியாளர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். பத்மாசனம், வஜ்ராசனம், ஏக பாதாசனம், தடாசனம், சக்ராசனம், உத்திர முண்டாசனம் உள்ளிட்ட 32 வகையான ஆசனங்கள் செய்யப்பட்டன.அதேபோல் ஒருங்கிணைந்த நாகை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி கிங்ஸ்லே கிறிஸ்டோபர் தலைமை தாங்கினார். யோகா பயிற்சியாளர் சுரேஷ் வழிநடத்தினார். இதில் முதன்மை குற்றவியல் நீதிபதி கார்த்திகா, உதவிஅமர்வு நீதிபதி சீனிவாசன், போக்சோ சிறப்பு நீதிபதி மணிவண்ணன் மற்றும் மாஜிஸ்திரேட்டுகள், வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர்.இதேபோல் ஒரத்தூர் சிதம்பரனார் நடுநிலைப்பள்ளியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு மாணவர்கள் யோகாசனங்களை செய்தனர். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர் பாலசண்முகம் வரவேற்றார். முடிவில் பள்ளி தலைமையாசிரியர் சிவா நன்றி கூறினார். வேதாரண்யம் குற்றவியல் மற்றும் நடுவர் நீதிமன்றத்தில் உலக யோகா தினத்தை முன்னிட்டு நீதிபதி (பொறுப்பு) செல்வி தீப்கா தலைமையில் யோகா பயிற்சி நடைபெற்றது. இதில் வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர்.