தேய்ந்து போன செருப்பு தைக்கும் தொழில்
தேய்ந்து போன செருப்பு தைக்கும் தொழில்
போடிப்பட்டி
ராமனின் பாதுகைகள் (செருப்புகள்) சிம்மாசனத்தில் அமர்ந்து ஒரு தேசத்தையே ஆண்டதாக புராணம் சொல்கிறது. செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன் ஆபிரஹாம் லிங்கன் அமெரிக்க அதிபரானதாக சரித்திரம் சொல்கிறது. ஆனால் செருப்பு தைக்கும் தொழிலாளர்களின் வாழ்வு என்பது அதிக எடையுள்ள மனிதன் அழுத்தி தேய்த்து நடக்கும் போது அவர் அணிந்திருக்கும் செருப்பின் நிலையை போல தேய்ந்து விட்டது. ஒவ்வொரு மனிதனையும் சுமந்து கொண்டு நீண்ட நெடிய பயணம் மேற்கொள்ளும் செருப்புகள் வீட்டுக்கு வெளியே மூலையில் கிடக்கும்.அதுபோன்ற அவல நிலை தான் இன்று செருப்பு தைக்கும் தொழிலாளிகளுக்கும் ஏற்பட்டுள்ளது.
ஏற்ற தாழ்வுகளற்ற சமூகம் உருவாக்கப்பட்டு விட்டாலும் அவர்கள் நடந்து செல்பவர்களின் முகங்களை நிமிர்ந்து பார்ப்பதில்லை. அவர்களின் பார்வை, பாதங்களின் மீது தான் இருக்கிறது. அறுந்த செருப்புகள் அவர்களின் பார்வையில் பட்டு விட்டால் 'வாங்க சாமி, கம்மியா தச்சி தரேன்' என்று மெல்லிய குரலில் அழைப்பார்கள். அறுந்த செருப்பை நேர்த்தியாக தைத்து கொடுத்து விட்டு 'போட்டு பாருங்க சாமி' இன்னும் ரெண்டு மூணு மாசத்துக்கு வரும். வேணும்னா வாங்க சாமி... நம்ம கிட்டயும் புது செருப்பெல்லாம் இருக்கு.. நாங்களே தைக்கிறது. ரொம்ப நாளைக்கு உழைக்கும்' என்று விளம்பரம் செய்வார்கள்.
காலப்போக்கில் இவ்வாறு செருப்பு தைக்கும் தொழிலாளர்கள் பலரும் தொழிலை விட்டு விட்டு மாற்றுத் தொழில் தேடி போய் விட்டார்கள்.அதற்குக் காரணம் என்ன?இன்றைய நிலையில் செருப்பு தைக்கும் தொழிலாளர்களின் நிலை என்ன?என்னும் பல கேள்விகளுக்கு விடை தேடி திருப்பூர் மாவட்டத்தில் செருப்பு தைக்கும் தொழிலாளர்கள் சிலரை சந்தித்தோம்.
நமது முன்னோர்கள் காலில் செருப்பு இல்லாமல் கல்லிலும் முள்ளிலும் சாதாரணமாக நடந்து திரிந்திருக்கிறார்கள். காலப்போக்கில் படிப்படியாக ஓலை, துணி, மரக்கட்டை போன்றவற்றை காலணியாக பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் தனது இடத்தை நீண்ட நாட்கள் தக்க வைத்திருந்தது தோல் செருப்புகள் தான்.அதையும் தாண்டி ரப்பர் செருப்புகள் ஆதிக்கம் வந்தாலும் தோல் செருப்புகளுக்கு தனி மவுசு இருந்தது. இந்த செருப்புகள் மீண்டும் மீண்டும் தைத்து போடுவதற்கு ஏற்றவையாக இருந்தது. முக்கிய வேலையாக செல்லும்போது செருப்பு அறுந்து விட்டால் கூச்சப்படாமல் கையில் தூக்கிச் சென்று அருகிலிருக்கும் செருப்பு தைப்பவரிடம் கொடுத்து விட்டு 'தெச்சி வெச்சிருப்பா, முக்கியமான வேலை இருக்கு..முடிச்சிட்டு வந்திடுறேன்' என்று வெறுங்காலுடன் நடந்து செல்லும் முதியவர்களை இன்று பார்க்க முடியவில்லை. வீட்டுக்குள்ளும் செருப்புகளோடு உலா வரும் மேல் தட்டு மக்களை பார்க்க முடிகிறது. தோல் செருப்புகளின் ஆதிக்கம் குறைந்து பிளாஸ்டிக் கலவையுடன் பலவிதமான மாடல்களில் செருப்புகள் சந்தைக்கு வந்து விட்டன.குறிப்பாக பெண்களுக்கென ஹை ஹீல்ஸ் உள்ளிட்ட பல ரகங்கள் வந்து விட்டது.அணியும் ஆடைகளுக்கு மேட்சாக செருப்பு மற்றும் ஷூ அணியும் பழக்கம் பல பெண்களுக்கு உள்ளது. மக்கள் தொகை பல மடங்கு அதிகரித்துள்ளது. ஒவ்வொருவரும் ஒன்றுக்கும் மேற்பட்ட செருப்புகளை வைத்துள்ளார்கள்.அப்படியானால் செருப்பு தைக்கும் தொழில் அமோக வளர்ச்சி அடைந்திருக்க வேண்டுமே! ஆனால் அடையாளம் தெரியாமல் அழிந்து வருவது வேதனை அளிப்பதாக உள்ளது.
அறுந்த செருப்பை தைத்து அணிவது கவுரவக் குறைச்சலாக பார்க்கப்படும் மன நிலை பலரிடம் உள்ளது.பல இடங்களில் ஒட்டு போட்ட ஒரு குடையுடன் சாலையோரத்தில் செருப்புகளை அடுக்கி வைத்துக் கொண்டு காத்திருக்கும் செருப்பு தைக்கும் தொழிலாளிகளை இன்னும் சில ஆண்டுகளில் பார்க்க முடியாத நிலை ஏற்படலாம்.
டாலர் சிட்டி என அழைக்கப்படும் திருப்பூரில் பிய்ந்து போன செருப்புகளை தைப்பதற்கு தயங்குபவர்கள்தான் அதிகம். அப்படியே அதை தைக்க முயன்றாலும் செருப்பு தைக்கும் தொழிலாளர்களை கண்டு பிடிப்பது அரிது... முன்பு எல்லாம் பஸ் நிலையம், ரெயில் நிலையம், மார்க்கெட் என மக்கள் கூடும் இடங்களில் கடைவிரித்த செருப்பு தைக்கும் தொழிலாளர்கள் அப்போது அங்கொன்றும், இங்குகொன்றுமாகத்தான் இருக்கிறார்கள். இதுகுறித்து செருப்பு தைக்கும் தொழிலாளர்கள் தங்கள் கருத்துகளை கூறியதாவது:-
ஆறுமுகம், (காதர்பேட்டை):-
நான் புஷ்பா ரவுண்டானா அருகில் 50 ஆண்டாக தொழில் செய்து வந்தார். தினமும் குறைந்தபட்சம் ரூ.50 கிடைக்கும். சில நேரங்களில் செருப்பு தைத்த பிறகு சில்லறை இல்லை மாற்றி வருவதாக கூறிவிட்டு சென்றுவிடுகிறார்கள். ஆனால் மறுபடியும் வருவதில்லை. இன்னும் சிலர் ஆன்லைன் பணப்பரிமாற்றம் செய்யும் செயலி இருக்கிறதா? என கேட்கிறார்கள். மழைக்காலங்களில் செருப்பு தைக்கும் தொழிலில் ஈடுபட முடியாது. கடந்த காலங்களில் புதிய செருப்புகளை பொதுமக்களுக்கு செய்து கொடுத்தோம். நவீன டிசைன்களில் காலணி வந்ததால் அதையே பொதுமக்கள் பயன்படுத்துகிறார்கள். முன்பு போல செருப்பு தைக்கும் தொழில் இல்லை.
கணேசன், (சின்னான்நகர்):-
நான் பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே செருப்பு தைக்கும் தொழில் செய்து வருகிறேன். காலை 7 மணி முதல் 2 மணி வரை வேலை செய்வேன். முன்பு எல்லாம் தீபாவளிக்கு முன் மக்கள் செருப்புகளை தைப்பதற்கு வருவார்கள். அதன்பிறகு பண்டிகையையொட்டி புதிய செருப்புகளை வாங்குவதால் 2 மாதம் கழித்தே ஆட்கள் வருவார்கள். அதுவரை வருமானம் கிடைக்காது.
15 வருடங்களுக்கு முன்பு பாலீஷ் போடுவதற்கு வந்தார்கள். இப்போது அவர்களே பாலீஸ் போட்டுக்கொள்கிறார்கள்.
ஸ்ரீரங்கன் (தாராபுரம்):-
கடந்த 20 வருடங்களுக்கு முன்பாக பழைய பஸ் நிலையத்திற்கு முன் 15 செருப்பு தைக்கும் தொழிலாளர்கள் இருந்தனர். ஆனால் தற்போது 7 பேர் மட்டுமே இந்த தொழில் செய்கின்றனர். கால சக்கரம் அனைத்து தொழிலையும் மாற்றும்போது அதில் செருப்பு தைக்கும் தொழில்மட்டும் விதி விலக்கா என்ன? இப்போது உள்ள இளைஞர்கள் தைத்த செருப்பை போட்டால் அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. பயன்படுத்திய பிறகு தூக்கி தூற எறிந்து விட்டு, புதியதை பயன்படுத்துவதே பேஷனாகி விட்ட நிலையில் செருப்பு தைக்கும் தொழிலை யார் திரும்பி பார்ப்பார்கள்.
ரவி, (இடுவாய்):-
என்னுடைய தந்தை 40 வருடமாக இந்த தொழில் செய்து வந்தார். பிறகு அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் நான் கடந்த 6 வருடமாக இந்த வேலையை செய்கிறேன். காலை 7.30 மணி முதல் இரவு 8 மணி வரை வேலை செய்வேன். பழைய பஸ் நிலையம் முன் செருப்பு தைப்பதினால் தினமும் செருப்பு தைப்பதற்கு ஆட்கள் வருகிறார்கள். தொடர்ந்து வரும் வாடிக்கையாளர்களும் இருக்கிறார்கள்.
செருப்பு தைக்கும் தொழிலாளர்கள் ஒற்றுமையாக இல்லாததால் அரசுக்கு கோரிக்கை வைப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
இவ்வாறு செருப்பு தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.