தை மாத பவுர்ணமியையொட்டி நிலா பிள்ளையார் வழிபாடு
தை மாத பவுர்ணமியையொட்டி மயிலம்பட்டியில் நிலா பிள்ளையார் வழிபாடு நடத்தப்பட்டது. இதையொட்டி பெண்கள் கும்மி அடித்து வழிபாடு நடத்தினர்.
தேவூர்:
நிலா பிள்ளையார் வழிபாடு
தேவூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் தை மாத பவுர்ணமியில் நிலா பிள்ளையார் வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். அதாவது அறுவடை செய்யப்பட்ட நெல்லை அரைத்து, பச்சரிசி பொங்கல் வைத்து சாமிக்கு படையலிடுவார்கள். இரவில் பெண்கள் அனைவரும் ஒன்றுகூடி, சிறுவர்-சிறுமிகளை நிலாவாக பாவித்து அவர்களை சுற்றி நின்று கும்மி அடித்து வழிபாடு நடத்துவார்கள்.
இந்தநிலையில் கடந்த 7 நாட்களாக தேவூர் அருகே உள்ள மயிலம்பட்டி கிராமத்தை சேர்ந்த பெண்கள் இரவில் ஒன்று கூடி கிராமிய பாடலுக்கு கும்மி அடித்து வழிபாடு செய்து வந்தனர்.
கும்மி அடித்து வழிபாடு
நேற்று தை மாத பவுர்ணமியையொட்டி மயிலம்பட்டியில் நிலா பிள்ளையார் வழிபாடு நடத்தப்பட்டது. இதையொட்டி இரவு 7 மணிக்கு கிராம மக்கள் அனைவரும் மாவிளக்கு எடுத்து, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். பின்னர் கோவிலில் படையலிட்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து சிறுவர்-சிறுமிகளை நிலாவாக பாவித்து, அவர்களை சுற்றி நின்று கிராமிய பாடல் பாடியபடி, கும்மி அடித்து வழிபட்டனர். மேலும், நிலாவாக வைக்கப்பட்ட கற்சிலை மற்றும் சிறுவர்-சிறுமிகளுக்கு பொங்கல் படையலிடப்பட்டது. தொடர்ந்து நள்ளிரவு வரை பெண்கள் கும்மி அடித்து வழிபட்டனர்.