முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு


முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு
x

ஆடி அமாவாசையையொட்டி, வைகை ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து ஏராளமானோர் வழிபட்டனர்.

திண்டுக்கல்

ஆடி அமாவாசை

ஆண்டுதோறும் ஆடி, தை, புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை நாட்கள் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்நாளில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பண வழிபாடு செய்வதால் அவர்களின் ஆசி கிட்டும் என்று புராணங்கள் கூறுகின்றன.

இதையொட்டி திண்டுக்கல்லில் ஆடி அமாவாசை நாளான நேற்று ஏராளமானவர்கள் திதி கொடுத்து தர்ப்பண வழிபாடுகளை நடத்தினர். அதன்படி திண்டுக்கல் கோபால சமுத்திர கரையில் தர்ப்பண வழிபாடுகள் நேற்று நடைபெற்றன.

கற்பூரம் ஏற்றி வழிபாடு

காலை 6 மணியளவில் கோபாலசமுத்திரக்கரைக்கு ஏராளமானவர்கள் தர்ப்பணம் கொடுக்க வந்தனர். அவ்வாறு வந்தவர்கள் வரிசையாக அமர்ந்து வாழை இலையில் பச்சரிசி, தேங்காய் பழம், பூ, காய்கறிகள் இவற்றை வைத்தனர்.

அதைத்தொடர்ந்து தர்ப்பணம் வழிபாடுகள் தொடங்கியது. இதில் புரோகிதர் மந்திரங்களைக் கூற அதை உடன் கூறி முன்னோர்களை நினைத்து எள், தண்ணீர் விட்டு திதி கொடுத்தனர். பின்னர் கற்பூரம் ஏற்றி தர்ப்பண வழிபாடுகளை நிறைவு செய்தனர்.

திண்டுக்கல் ஆர்.எம். காலனியில் உள்ள தனியார் அமைப்பின் நந்தவனத்தில் தர்ப்பண வழிபாடுகள் நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு திதி கொடுத்தனர்.

பழனி சண்முகநதி

இதேபோல் பழனி சண்முகநதிக்கரையில், காலையிலேயே தர்ப்பணம் செய்ய ஏராளமானோர் குவிந்தனர். அங்கு இலையை விரித்து அதில் வாழைப்பழம், எள், சாதம் மற்றும் பூஜை பொருட்களை படைத்து புரோகிதர்கள் முன்னிலையில் முன்னோர் ஆசி கிடைக்க வேண்டி தர்ப்பணம் செய்தனர். பின்னர் நதியில் புனித நீராடினர்.

இதேபோல் ஆடி அமாவாசையையொட்டி பழனி அருகேயுள்ள மானூர் சுவாமி கோவிலிலும் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர். மேலும் பழனி சுற்றுப்பகுதியில் உள்ள பல்வேறு சித்தர் பீடங்களுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

வைகை ஆற்றில் தர்ப்பணம்

நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி வீரஆஞ்சநேயர் கோவில் அருகே, வைகை ஆற்றுப்படுகையில் ஆடி அமாவாசையையொட்டி ஏராளமானோர் அங்கு திரண்டனர். பின்னர் அவர்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தும், தர்ப்பணம் செய்தும் வழிபாடு நடத்தினர். மேலும் வீர ஆஞ்சநேயர் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

ஆடி அமாவாசையையொட்டி திண்டுக்கல் மலையடிவாரம் பத்ரகாளியம்மன் கோவிலில் சிறப்பு யாகம் நடந்தது. மேலும் திண்டுக்கல் மலையடிவாரம் ஓத சுவாமிகள் கோவில், பாரதிபுரம் சாய்பாபா கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.


Next Story