அடிப்படை வசதிகள்செய்து தர வேண்டும்
அடிப்படை வசதிகள்செய்து தர வேண்டும்
குண்டடம்
தாராபுரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தாலுகா செயலாளர் என்.கனகராஜ் தலைமையில் ஜமாபந்தியில் தாராபுரம் ஆர்.டி.ஓ. குமரேசனிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் குடிநீர், சுகாதாரம், தெருவிளக்கு, சாலைவசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ளது. குறிப்பாக காந்திநகர் மேல்நிலைத் தொட்டிக்கு செல்லும் மெயின் குழாயிலும் சம்பத் நகர், பாத்திமா நகர், கண்ணகி நகர் பகுதிகளில் சட்டவிரோதமாக போடப்பட்டுள்ள குடிநீர் இணைப்புகளை உடனடியாக துண்டித்து அனைத்து பகுதிகளுக்கும் சீராக குடிநீர் வழங்கவேண்டும்.
வசந்தம் நகர், எஸ்பி நகர், எம்பிஎஸ் காலனி, ஜெய்கணேசா நகர், ஆப்பிள் ரெசிடென்சி, கேஎஸ்கே நகர் ஆகிய பகுதிகளுக்கு முறையாக குடிநீர் வழங்கவேண்டும். பொது குடிநீர் குழாய் அமைக்கவேண்டும். வேலவர் மண்டபத்திற்கு வடபுறமாக குமரன் நகர் செல்லும் நுழைவாயிலில் பேக்கரி கழிவுகள், உடைந்த கண்ணாடி டம்ளர், சாம்பல் போன்றவை கொட்டப்பட்டு நடைபாதை அசுத்தம் செய்யப்படுகிறது. மழைக்காலங்களில் அக்கழிவுகள் சாலை முழுவதும் பரவி துர்நாற்றம் வீசுகிறது. எனவே அந்த கழிவுகளை அகற்றுவதோடு வருங்காலங்களில் கழிவுகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். பிஷப் தார்ப் கல்லூரியில் இருந்து என்.எம்.எல் நகர் வரை உள்ள தார்சாலையின் இருபுறமும் குப்பைகள் மலைபோல் குவிந்துள்ளது. அதை அகற்றவேண்டும். பல்வேறு பகுதிகளில் தெருவிளக்கு, சாலைவசதி கோரி மனுக்கள் அளிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே உடனடியாக அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் எனவும் கோரிக்கைகள் நிறைவேற்றபடாவிட்டால் வரும் ஜூன் 5 -ந் தேதி அறவழிப்போராட்டம் நடத்தப்படும். என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
--------------