சீறிப்பாய்ந்த காளைகளுடன் மல்லுக்கட்டிய வீரர்கள்; மாடு முட்டி வாலிபர் பலி
சீறிப்பாய்ந்த காளைகளுடன் வீரர்கள் மல்லுக்கட்டினர். மாடு முட்டி வாலிபர் உயிரிழந்தார்.
ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டு ஆகும். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டை போல திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே பெரிய சூரியூரில் நற்கடல்குடி கருப்பண்ணசாமி கோவில் திருவிழாவையொட்டி மாட்டு பொங்கல் தினத்தில் தொன்று தொட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி மாட்டு பொங்கல் தினமான நேற்று பெரிய சூரியூரில் இந்த ஆண்டு மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதற்காக சூரியூர் பெரியகுளத்தில் ஜல்லிக்கட்டு மைதானம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு இருந்தது. 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ், 2 நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ் உள்ள மாடுபிடி வீரர்கள் போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
உறுதிமொழி ஏற்பு
ஜல்லிக்கட்டில் பங்கேற்க திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 567 ஜல்லிக்கட்டு காளைகள் அழைத்து வரப்பட்டன. இவற்றை 315 மாடுபிடி வீரர்கள் அடக்க முயன்றனர். இதற்காக காலை 5 மணியில் இருந்தே காளைகளை அதன் உரிமையாளர்கள் அழைத்து வந்திருந்தனர். அவற்றுக்கு கால்நடை மருத்துவர்களால் உடல் தகுதி பரிசோதனை செய்யப்பட்டு, வாடிவாசலுக்குள் அனுமதிக்கப்பட்டன. காலை 8 மணிக்கு வாடிவாசல் முன்பு திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் உறுதிமொழியை வாசிக்க, அவரது முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
சீறிப்பாய்ந்த காளைகள்
இதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கோட்டாட்சியர் தவசெல்வன், திருவெறும்பூர் தாசில்தார் ரமேஷ் உள்ளிட்ட அதிகாரிகள், கவுன்சிலர் செந்தில்நாதன் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊர் முக்கியஸ்தர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாடுபிடி வீரர்கள் ஒரு குழுவுக்கு 25 பேர் வீதம் பிரிக்கப்பட்டு களத்தில் மாடு பிடிக்க அனுமதிக்கப்பட்டனர். முதலில் வாடிவாசல் வழியாக சூரியூர் நற்கடல் கருப்பண்ணசாமி கோவில் காளை, முத்து மாரியம்மன் கோவில் காளை உள்பட 5 கோவில் காளைகள் சீறிப்பாய்ந்து வெளியேறின. இதைத்தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசல் வழியாக காளைகள் சீறிப்பாய்ந்தன. சில காளைகள் தன்னை 'தொட்டுப்பார் பார்க்கலாம்' என வீரர்களை நெருங்க விடாமல் அதகளம் செய்தன. இந்த ஜல்லிக்கட்டில் அ.தி.மு.க.வின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான செவலை, கொம்பன் காளைகள் களம் இறங்கின. விஜயபாஸ்கர் நேரடியாக ஜல்லிக்கட்டை கண்டு ரசித்தார். வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த அவரது காளைகளை, வீரர்கள் மடக்க முயன்று அவைகளில் ஒன்றைக்கூட பிடிக்க முடியவில்லை. மாடுகளே வென்றன.
பரிசுகள்
சீறிப்பாய்ந்த சில காளைகளுக்கு பயந்து காளையர்கள் உயிர் பிழைக்க வாடிவாசலையொட்டி இருந்த பக்கவாட்டு தடுப்பு கம்பிகளில் ஏறி தொற்றிக்கொண்டனர். சில காளைகள், பிடி கொடுக்காமல் ஆட்டம் காண்பித்ததோடு மட்டும் அல்லாமல் மீண்டும் வாடிவாசல் நோக்கி வந்து வீரர்களை நோக்கி சீறிப்பாய்ந்தன. காளையர்களிடம் பிடிபடாமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் பரிசு பொருட்கள், ரொக்கப்பரிசு ஆகியவை வழங்கப்பட்டன.
இந்த ஜல்லிக்கட்டில் காளையர்களிடம் சிக்காமல் வெற்றி பெற்ற காளைகளே அதிகம் ஆகும். காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மாலை 4.30 மணி வரை நடைபெற்றது. இதில் 17 மாடுகளை அடக்கிய சூரியூரை சேர்ந்த பூபாலன் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு பரிசாக மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டது. இதேபோல் 14 காளைகளை அடக்கிய ரஞ்சித் 2-வது பரிசான தங்கக்காசை தட்டிச்சென்றார்.
வாலிபர் பலி-58 பேர் படுகாயம்
மாலை வரை நடந்த ஜல்லிக்கட்டில் மாடுகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள், உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என மொத்தம் 59 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் புதுக்கோட்டை மாவட்டம், களமாவூரை சேர்ந்த ஏ.சி. மெக்கானிக் அரவிந்த் (வயது 25), சூரியூரை சேர்ந்த சம்பத் (29), வேங்கூரை சேர்ந்த நிவாஷ்குமார் (25), சப்பாணிபட்டியை சேர்ந்த சரத்குமார் (24), கல்லுக்குழியை சேர்ந்த கோபி (27), சன்னாசிபட்டியை சேர்ந்த ராஜேந்திரன் (59), வீரப்பட்டியை சேர்ந்த தனுஷ் (19), எட்டுக்கல்பட்டி செல்லமுத்து, கீரனூரை சேர்ந்த ஸ்டீபன்ராஜ், பழனி (14) ஆகியோர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் அரவிந்த், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஜல்லிக்கட்டு காளையுடன் துணைக்கு வந்த இவர் மைதானத்துக்கு வெளியே நின்று கொண்டிருந்தபோது, அவரை மற்றொரு மாடு முட்டியது குறிப்பிடத்தக்கது.