எழுத்தாளர் கி.ரா. படித்த பள்ளி புதுப்பிக்கப்பட்டு திறப்புவிழா
எழுத்தாளர் கி.ரா. படித்த பள்ளி புதுப்பிக்கப்பட்டு திறப்புவிழா நடந்தது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே இடைசெவலில் கரிசல்பூமி எழுத்தாளர் கி.ராஜநாராயணன் படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் ரூ.25 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டது. இந்த பள்ளிக்கூடத்தை நேற்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்தவாறு காணொளி காட்சி மூலமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதைதொடர்ந்து இடைசெவல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவில் தூத்துக்குடி கூடுதல் கலெக்டர் சரவணன் கல்வெட்டை திறந்து வைத்தார். தொடர்ந்து பள்ளியில் குத்து விளக்கேற்றி பள்ளி வளாகத்தையும், அங்குள்ள அலமாரியில் இருந்த கி.ரா.வின் புத்தகங்களையும் அவர் பார்வையிட்டார். பின்னர் பள்ளி மாணவ- மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்ச்சியில் கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர்கள் சுப்புலட்சுமி, சீனிவாசன், எழுத்தாளர் கி.ரா. மகன் பிரபி, இடைசெவல் பஞ்சாயத்து தலைவர் ரெங்கநாயகி மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.