நாளை 2-ம் நிலை காவலர்களுக்கான எழுத்துத்தேர்வு: ஹால்டிக்கெட்டுடன் கூடுதலாக ஒரு அடையாள அட்டை கொண்டு வர வேண்டும் தேர்வர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு


நாளை 2-ம் நிலை காவலர்களுக்கான எழுத்துத்தேர்வு:    ஹால்டிக்கெட்டுடன் கூடுதலாக ஒரு அடையாள அட்டை கொண்டு வர வேண்டும்    தேர்வர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
x
தினத்தந்தி 26 Nov 2022 12:15 AM IST (Updated: 26 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் 2-ம் நிலை காவலர்களுக்கான எழுத்துத்தேர்வுக்கு ஹால்டிக்கெட்டுடன் கூடுதலாக அடையாள அட்டையை தேர்வர்கள் கொண்டு வர வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவிட்டார்.

கடலூர்


தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் 2022-ம் ஆண்டு நடத்தப்பட உள்ள 3552 பணியிடங்களுக்கான 2-ம் நிலை காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை), 2-ம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த தேர்வை கடலூர் மாவட்டத்தில் 16781 பேர் எழுத உள்ளனர்.

இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட காவல் துறையினர் செய்து வருகின்றனர். இதற்கிடையில் தேர்வு மையங்களுக்கு வரும் தேர்வர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் தெரிவித்துள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு:-

ஹால் டிக்கெட்

விண்ணப்பதாரர் ஹால்டிக்கெட்டை TNUSRB இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்த பிறகு, அதில் குறிப்பிட்டுள்ள விவரங்களை சரிபார்க்கவும். இதில் ஏதேனும் சந்தேகங்கள், மாற்றங்கள் இருந்தால் இந்த வாரிய உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம்.

ஹால்டிக்கெட்டில் பெயர், பிறந்த தேதி அல்லது வகுப்பு வாரி பிரிவில் ஏதேனும் மாற்றம் இருந்தால், விண்ணப்பதாரர் தொடர்புடைய அசல் சான்றிதழ்கள் மற்றும் அதன் புகைப்பட நகல்களை அரசிதழ் பதிவு பெற்ற அரசு அலுவலரிடம் சான்றொப்பம் பெற்று, எழுத்துத்தேர்வின்போது தேர்வுக்கூட கண்காணிப்பாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

அனுமதிக்க இயலாது

இந்த ஹால்டிக்கெட்டில் விண்ணப்பதாரரின் புகைப்படம் இல்லாமல் இருந்தாலோ அல்லது தெளிவாக இல்லாமல் இருந்தாலோ விண்ணப்பதாரர் தனது பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்தை ஒட்டி அரசிதழ் பதிவு பெற்ற அரசு அலுவலரிடம் சான்றொப்பம் பெற்று வரவேண்டும்.

ஹால்டிக்கெட்டை கொண்டு வராத விண்ணப்பதாரரை தேர்வு மையத்திற்குள் அனுமதிக்க இயலாது. ஹால்டிக்கெட்டுடன் கூடுதலாக விண்ணப்பதாரர் புகைப்படத்துடன் கூடிய அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டையான ஆதார், ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒரு அசல் அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும்.

ரத்து செய்யப்படும்

தேர்வு தொடங்கிய பின்னர் விண்ணப்பதாரர் யாரும் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். ஏற்கனவே தெரிவித்தபடி விண்ணப்பதாரர் விடைத்தாளில் பட்டை தீட்ட, எழுத நீலம் அல்லது கருப்பு நிற பால்பாயிண்ட் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தேர்வு அட்டை கொண்டு வர வேண்டும். தேர்வு மையத்துக்குள் செல்போன், ஸ்மார்ட் வாட்ச், கால்குலேட்டர் மற்றும் ப்ளுடூத் உட்பட எந்தவொரு எலக்ட்ரானிக் கருவிகளும் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டாது. மீறினால் அவரது தேர்வு நிலை ரத்து செய்யப்படும். விண்ணப்பதாரர் தேர்வு முடியும் வரை தேர்வு மையத்தை விட்டு வெளியே செல்ல கூடாது. தேர்வு எழுதும் போது பேசவோ, சைகை புரியவோ, பார்த்து எழுதவோ கூடாது. மீறினால் அவரது தேர்வு நிலை ரத்து செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story