கிராம உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு
விழுப்புரம் மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு நடந்தது.
விழுப்புரம்,
தமிழகத்தில் காலியாக உள்ள கிராமநிர்வாக உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு நேற்று அந்தந்த மாவட்டங்களில் நடந்தது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் காலியாக உள்ள 90 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நேற்று 17 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வுக்கு மொத்தம் 6940 தேர்வர்கள் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் 4545 தேர்வர்கள் மட்டுமே கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 2395 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதில் விழுப்புரம் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வு மையத்தை விழுப்புரம் மாவட்டவருவாய் அலுவலர் பரமேஸ்வரி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் தேர்வர்களின் நுழைவுச்சீட்டினை சரிபார்த்தார். தொடர்ந்து தேர்வர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரியான முறையில் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா? என்றும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது விழுப்புரம் உதவி கலெக்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.