பிரசவத்தில் பெண்ணுக்கு தவறான அறுவை சிகிச்சை: அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் தர்ணா கடலூரில் பரபரப்பு


பிரசவத்தில் பெண்ணுக்கு தவறான அறுவை சிகிச்சை: அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் தர்ணா கடலூரில் பரபரப்பு
x
தினத்தந்தி 23 Feb 2023 12:15 AM IST (Updated: 23 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தின் போது பெண்ணுக்கு தவறான அறுவை சிகிச்சை செய்ததால், உறவினர்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

பண்ருட்டி அருகே உள்ள சிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி பத்மாவதி. கர்ப்பிணியாக இருந்த இவர், பிரசவத்திற்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த 19.9.2022 அன்று அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் சிகிச்சை முடிந்ததும் பத்மாவதி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அதன் பிறகு அவருக்கு வயிறு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 3 நாட்களாக எவ்வித சிகிச்சையும் அளிக்காததால், உறவினர்கள் அவரை புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அப்போது பத்மாவதிக்கு, டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் பிரசவத்தின் போது குடல் பகுதியையும், கர்ப்பப்பை பகுதியையும் சேர்த்து தையல் போட்டுள்ளதும், அதனால் தான் வயிறு வலி ஏற்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆஸ்பத்திரியில் தர்ணா

இதில் பாதிக்கப்பட்ட பத்மாவதி, சிகிச்சை முடிந்ததும் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க மருத்துவ குழு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அதிகாரிகள் விசாரணை நடத்திய பிறகு, எவ்வித அறிக்கையும் சமர்ப்பிக்கவில்லை என தெரிகிறது. இதனால் பத்மாவதி மற்றும் அவரது குடும்பத்தினர் கலெக்டரிடம் தொடர்ந்து புகார் அளித்தும், கண்டுகொள்ளவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை பத்மாவதி மற்றும் அவரது உறவினர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் ஆஸ்பத்திரி வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த கடலூர் புதுநகர் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் ஆகியோர் விரைந்து வந்து தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

டாக்டர்கள் மீது நடவடிக்கை

அப்போது அவர்கள், தவறாக அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் ஆஸ்பத்திரியில் பத்மாவதிக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர். அதற்கு போலீசார், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதனை ஏற்றுக்கொண்ட தர்ணாவில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story