மாவட்ட எல்லையில் ஊருக்குள் உலா வரும் காட்டு யானை


மாவட்ட எல்லையில் ஊருக்குள் உலா வரும் காட்டு யானை
x
திருப்பூர்


திருப்பூர் மாவட்ட எல்லையை ஒட்டியுள்ள கோவை மாவட்ட கிராமப் பகுதிகளில் காட்டு யானை உலா வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

வன விலங்குகள் ஊடுருவல்

மனிதர்கள் வனவிலங்குகள் மோதல் என்பது நீண்ட காலமாக உள்ள பிரச்சினையாகவே உள்ளது. வனப்பகுதியில் போதிய உணவு, தண்ணீர் கிடைக்காத நிலையிலும், விவசாய விளை பொருட்களின் சுவைக்கு அடிமையான நிலையிலு வன விலங்குகள் ஊருக்குள் ஊடுருவுகின்றன. அவ்வாறு வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானை, காட்டெருமை, காட்டுப் பன்றிகள் போன்ற விலங்குகளால் பயிர் சேதம் மட்டுமல்லாமல் உயிர் சேதமும் ஏற்பட்டு வருகிறது.

எனவே வனவிலங்குகளை வனத்துக்குள் கட்டுப்படுத்த அகழி அமைத்தல், மின் வேலி அமைத்தல், தொட்டிகள் மற்றும் தடுப்பணைகள் மூலம் தண்ணீர் இருப்பு வைத்தல் போன்ற பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் வன விலங்குகளின் ஊடுருவலை முற்றிலும் தடுக்க முடியாத நிலையே உள்ளது.

அச்சம்

இந்தநிலையில் உடுமலையையடுத்த தேவனூர் புதூர் உள்ளிட்ட கிராமப் பகுதிகளிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் காட்டு யானை ஒன்று உலா வருகிறது. அதனை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்காகவும், நமது மாவட்ட எல்லைக்குள் வராமல் தடுக்கவும், உடுமலை, அமராவதி வனத்துறையினர் அங்கு முகாமிட்டுள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

செல்லாண்டிக்கவுண்டன் புதூர் உள்ளிட்ட பகுதிக்கு அருகில் காட்டு யானை ஒன்று குடியிருப்புகள் மற்றும் சாலைகளில் உலா வருகிறது. வனத்துறையினரின் எச்சரிக்கையை மீறி அந்த யானையை பலரும் செல்போன்களில் படம் பிடிக்கின்றனர். இதனால் யானையை காட்டுக்குள் விரட்டும் பணிகள் சிரமமாகிறது. இந்தநிலையில் இரவு நேரங்களில் யானைகள் நீண்ட தூரம் பணம் செய்யக்கூடியவை. எனவே நமது மாவட்ட கிராமங்களுக்கும் வந்து விடுமோ என்ற அச்சம் உள்ளது. எனவே இந்த பகுதிக்கு அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வருவதை தவிர்ப்பது நல்லது'என்று கூறினர். இந்த நிலையில் யானை ஊருக்குள் நடமாடும் வீடியோவை பலரும் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.


Next Story