முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரம் செலுத்திய யாசகர்
முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரத்தை யாசகர் ஒருவர் செலுத்தினார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள ஆலங்கிணறு பகுதியை சேர்ந்தவர் பூல்பாண்டியன் (வயது 73). யாசகரான இவர் நேற்று காலை சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அவர் அங்கிருந்த வங்கியில் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக ரூ.10 ஆயிரத்தை செலுத்தினார்.
இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறும் போது, 'ஆதரவற்ற நிலையில் என்னை போல் நிறைய பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த சேவையை செய்ய தொடங்கினேன். ஒவ்வொரு ஊராக சென்று பல பேரிடம் யாசகம் பெற்று இதுவரை ரூ.55 லட்சத்து 70 ஆயிரம் தொகையை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளேன். ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.2 லட்சம் ரூபாய் நிதி வழங்கி வருகின்றேன். தொடர்ந்து மக்களுக்காக நிதி வழங்குவேன். மீண்டும் யாசகம் பெற்று முதல்-அமைச்சரை சந்தித்து அதை வழங்க உள்ளேன்' என்றார்.