எல்லைப்பிடாரியம்மன் கோவிலில் குண்டம் விழா: 10 ஆயிரம் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்-இன்று பால்குடம் ஊர்வலம்


சேலம் குமாரசாமிப்பட்டி எல்லைப்பிடாரியம்மன் கோவிலில் நேற்று குண்டம் திருவிழா நடைபெற்றது. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று பால் குடம் ஊர்வலம் நடக்கிறது.

சேலம்

எல்லைப்பிடாரியம்மன் கோவில்

சேலம் குமாரசாமிப்பட்டியில் பிரசித்தி பெற்ற எல்லைப்பிடாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 17-ந் தேதி முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கி வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. தினமும் எல்லைப்பிடாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது.

விழாவையொட்டி அம்மனுக்கு பூச்சாட்டுதல் சிறப்பாக நடத்தப்பட்டது. கடந்த நேற்று முன்தினம் இரவு மாவிளக்கு ஊர்வலம், சக்தி அழைப்பும், 29-ந் தேதி அம்மன் ஊர்வலம், அலகு குத்துதல், பொங்கல் வைபவம், அக்னி கரகம், பூங்கரகத்துடன் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடந்தது.

குண்டம் இறங்கும் நிகழ்ச்சி

நேற்று காலை அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து அம்மன் வீதி உலா நடந்தது. மாலையில் பக்தர்கள் அக்னி குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக கோவில் அருகே அக்னி குண்டம் அமைக்கப்பட்டு இருந்தது. இதில் ஆண்கள், பெண்கள், திருநங்கைகள், சிறுவர், சிறுமிகள் உள்ளிட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சில பக்தர்கள் தங்கள் குழந்தைகளுடன் தீ மிதித்தனர். மாலை 6 மணிக்கு தொடங்கிய தீமிதி விழா 10 மணி வரை நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தீ மிதி விழாவை காண ஏராளமானவர்கள் கோவிலுக்து வந்திருந்தனர். இதனால் கோவிலில் பக்தர்கள், பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. குண்டம் திருவிழாவையொட்டி கோவில் வளாகத்தை சுற்றி 400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழு தலைவரும், மாநகராட்சி பணிக்குழு தலைவருமான எம்.ஆர்.சாந்தமூர்த்தி மற்றும் கோவில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

இன்று பால்குடம் ஊர்வலம்

இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு பால்குடம் ஊர்வலமும், மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு பாலாபிஷேகமும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு அம்மனுக்கு தங்ககவசம் சாத்துப்படி நடக்கிறது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) இரவு 10 மணிக்கு சத்தாபரணமும், 2-ந் தேதி காலை 8 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது.


Next Story