மாரியம்மன் கோவிலில் மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி
தேவணாம்பாளையத்தில், தேர்த்திருவிழாவையொட்டி மாரியம்மன் கோவிலில் மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நெகமம்
தேவணாம்பாளையத்தில், தேர்த்திருவிழாவையொட்டி மாரியம்மன் கோவிலில் மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தேர்த்திருவிழா
நெகமத்தை அடுத்த தேவணாம்பாளையம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தேர்த்திருவிழா, கடந்த மாதம் 17-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 18-ந் தேதி நோன்பு சாற்றுதல் நிகழ்ச்சி, 25-ந் தேதி புண்யாகவாசம் மற்றும் கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது.
இதையடுத்து 26-ந் தேதி முதல் இந்த மாதம் 3-ந் தேதி வரை யாக சாலை பூஜை, அம்மன் திருவீதி உலா, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் பூவோடு எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது.
பரி வேட்டை
பின்னர் 4-ந் தேதி மகா அபிஷேகம், அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து அம்மன் திருத்தேருக்கு செல்லும் நிகழ்வு நடந்தது.
பின்னர் யாக சாலை பூஜைகள், 3 நாட்கள் தேர் இழுத்தல், தேர் கால் பார்த்தல், பரி வேட்டை, கம்பம் கலைத்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மஞ்சள் நீராடல்
இந்த நிலையில் நேற்று அம்மனுக்கு மஞ்சள் நீராடல் மற்றும் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மகா அபிஷேகம், அம்மனுக்கு அலங்கார சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.