ஏற்காட்டில் கோடை விழா இன்று தொடங்குகிறது- 4 அமைச்சர்கள் பங்கேற்பு
ஏற்காட்டில் 46-வது கோடை விழா- மலர் கண்காட்சி இன்று தொடங்குகிறது. இந்த விழாவில், 4 அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
கோடை விழா
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் ஆண்டு தோறும் மே மாதத்தில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் கோடை விழா மற்றும் மலர்கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு ஏற்காட்டில் 46-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு தொடங்குகிறது.
இதில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், வனத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டு 46-வது கோடை விழா, மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கின்றனர். தொடர்ந்து நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர்கள் கலந்து கொண்டு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகிறார்கள்.
5 லட்சம் மலர்கள்
கோடை விழாவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தோட்டக்கலைத்துறையின் சார்பில் அண்ணா பூங்காவில் பொன்னியின் செல்வன் கப்பல் வடிவம், டிராகன் வாரியர், சோட்டா பீம், ஹனிபீம் உள்ளிட்ட பல்வேறு வடிவமைப்புகள் கார்னேஷன், ஜெர்பரா, ஆந்தூரியம், ஆர்க்கிட் உள்ளிட்ட 5 லட்சம் அரிய வண்ண, வண்ண மலர்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.
கோடை விழாவில் நகராட்சி நிர்வாகம், வேளாண்மை துறை, ஊரக வளர்ச்சித் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, மீன்வளத்துறை உட்பட 42 துறைகள் சார்பில் அரங்குகள் அமைத்து, அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் வகையில் பல்துறை பணிவிளக்க முகாம் நடத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக, உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் நாள்தோறும் சிறுதானிய உணவுகளின் முக்கியத்துவம் குறித்து விளக்கும் வகையில் 50 வகையான சிறுதானிய உணவுகள் தயார் செய்யும் முறை குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட உள்ளது.
மலர் கண்காட்சி
மேலும், குழந்தைகள், சுற்றுலா பயணிகள் என அனைத்துத் தரப்பு மக்களையும் கவரும் வகையில், தோட்டக்கலை துறையின் சார்பில் அண்ணா பூங்காவில் மலர் கண்காட்சி, பழக்கண்காட்சி மற்றும் காய்கறிக் கண்காட்சிகளும் அமைக்கப்பட உள்ளது.
நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் கொழு, கொழு குழந்தைகள் போட்டி, பாரம்பரிய உணவுப் போட்டி, மகளிர் திட்டத்தின் சார்பில் கோலப்போட்டி, சுற்றுலாத்துறையின் சார்பில் சுற்றுலா பயணிகளுக்கு படகு போட்டிகள் நடத்தப்படவுள்ளது. இதுதவிர, கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் செல்ல பிராணிகள் (நாய்கள்) கண்காட்சி, கலைப்பண்பாட்டுத்துறை மற்றும் சுற்றுலாத்துறை ஒருங்கிணைந்து ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் இன்னிசை நிகழ்ச்சிகள் மற்றும் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது. மேலும், இளைஞர்களுக்கான கால்பந்து, கைப்பந்து, கிரிக்கெட், கபாடி, கயறு இழுத்தல், மாரத்தான் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி இன்று தொடங்கி 28-ந் தேதி வரை 8 நாட்கள் நடைபெறவுள்ளது.
கலெக்டர் ஆய்வு
இதனிடையே, ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சிக்கான முன்னேற்பாடு பணிகளை நேற்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.