பருத்தி செடிகளில் வெள்ளைப்பூச்சி தாக்குதலால் விளைச்சல் பாதிப்பு
விளாத்திகுளம் பகுதியில் பருத்திச் செடிகளில் வெள்ளைப்பூச்சி தாக்குதலால் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் பகுதியில் பருத்திச் செடிகளில் வெள்ளைப்பூச்சி தாக்குதலால் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
வெள்ளைப்பூச்சி தாக்குதல்
விளாத்திகுளம் பகுதியிலுள்ள புளியங்குளம், மந்திக்குளம், பூசனூர், கோட்டைமேடு, கெச்சிலாபுரம், கோட்டாநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தியை தை மாதங்களில் மிளகாய் செடிகளுக்கு ஊடுபயிராகவும், கோடைகாலங்களிலும் பயிரிட்டனர். ஆனால், பருத்திச் செடிகளில் வெள்ளைப்பூச்சி தாக்குதலினால் பெரும்பாலான பருத்திச் செடிகளில் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
எஞ்சியுள்ள பருத்தியை விவசாயிகள் பறித்து விற்பனைக்கு கொண்டு சென்ற போது ஒரு குவிண்டால் பருத்தி அடிமாட்டு விலைக்கு விற்பனையாகி வருகிறது. வழக்கமாக ஒரு குவிண்டால் பருத்தியை ரூ.11 ஆயிரத்துக்கு வாங்கி வந்த வியாபாரிகள் வெள்ளப்பூச்சி தாக்குதல் காரணமாக, ஒரு குவிண்டால் பருத்தியை ரூ.7ஆயிரத்துக்கு மட்டுமே வாங்கி வருகின்றனர்.
ஏற்கனவே விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பருத்தி விலையும் குறைந்ததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
விவசாயிகள் கோரிக்கை
இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், இந்த வெள்ளப்பூச்சி தாக்குதல் குறித்து வேளாண் அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்றோம். ஆனாலும் வெள்ளப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த முடியாமல், விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. நிலத்தில் விளைந்துள்ள குறைந்தளவு பருத்தியையும் விற்பனைக்கு கொண்டு சென்றால், மிக குறைந்தவிலைக்கு வியாபாரிகள் வாங்குகின்றனர். இதனால் இப்பகுதி பருத்தி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளோம். ஆகையால் தமிழக அரசு பருத்திக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி வெள்ளப்பூச்சி தாக்குதலினால் பாதிக்கப்பட்ட பருத்திச் செடிகளை வேளாண்மைத்துறை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து தகுந்த இழப்பீடு கிடைக்க உரிய ஏற்பாடு செய்ய வேண்டும், என தெரிவித்தனர்.