உளுந்து பயிரில் தொழில்நுட்பங்களை கடைபிடித்து கூடுதல் மகசூல் பெறலாம் விவசாயிகளுக்கு, வேளாண் அதிகாரி அறிவுரை
உளுந்து பயிரில் தொழில்நுட்பங்களை கடைபிடித்து கூடுதல் மகசூல் பெறலாம் என்று விவசாயிகளுக்கு, வேளாண் அதிகாரி அறிவுரை வழங்கி உள்ளாா்.
கண்டாச்சிமங்கலம்,
தியாகதுருகம் வேளாண்மை உதவி இயக்குனர் சந்துரு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பகுதியில் வடகிழக்கு பருவமழை காலத்தில் புன்செய் நிலங்களில் சுமார் 4 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மானாவாரி பயிராக உளுந்து சாகுபடி செய்வது வழக்கம். இவ்வாறு மானாவாரி உளுந்து சாகுபடி செய்யும் விவசாயிகள் தரச்சான்று பெற்ற நோய் எதிர்ப்பு சக்தி உடைய வம்பன்-8 மற்றும் வம்பன்-11 ஆகிய ரகங்களை தேர்வு செய்து விதைக்கலாம்.
இதில் ஹெக்டேருக்கு 20 கிலோ விதை தேவைப்படும். வயலினை நன்றாக இரண்டு முறை உழவு செய்து மக்கிய தொழு உரத்தினை ஹெக்டேருக்கு 12.5 டன் வீதம் இடவேண்டும். பூசணக் கொல்லி மூலம் விதை நேர்த்தி செய்யாத விதைகளை டிரைக்கோடர்மா விரிடி 4 கிலோ அல்லது சூடோமோனஸ் 10 கிலோ ஆகியவற்றுடன் விதை நேர்த்தி செய்யலாம். பின்பு உயிர் உரம் ரைசோபியம் மற்றும் பாஸ்போ பாக்டீரிடியா ஆகியவற்றுடன் விதை நேர்த்தி செய்து நிழலில் உலர வைத்து பின்பு விதைக்கவும்.
ஹெக்டேருக்கு அடி உரமாக 30 கிலோ யூரியா, 20 கிலோ பொட்டாஷ், 140 கிலோ சூப்பர் ஆகியவற்றை கலந்து இடவேண்டும். விதைகளை சரியான இடைவெளியில் விதைக்க வேண்டும். பயிர் வளர்ந்த 30 மற்றும் 45-வது நாள் 500 மி.லி நேனோ யூரியாவை 125 லிட்டர் நீரில் கரைத்து தெளிப்பதன் மூலம் பயிரின் வளர்ச்சி ஊக்கப்படுத்தப்பட்டு அதிக மகசூல் பெறலாம்.
மேற்கண்ட தொழில்நுட்பங்களை கடைபிடித்து மானாவாரி உளுந்து சாகுபடியில் விவசாயிகள் அதிக மகசூல் பெறலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.