பருவம் தவறிய மழையால் சம்பா சாகுபடியில் மகசூல் இழப்பு


பருவம் தவறிய மழையால் சம்பா சாகுபடியில் மகசூல் இழப்பு
x
தினத்தந்தி 20 Feb 2023 12:15 AM IST (Updated: 20 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை மாவட்ட பகுதிகளில் பருவம் தவறிய மழையால் சம்பா சாகுபடியில் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏக்கருக்கு 15 மூட்டை நெல் மட்டுமே கிடைப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மயிலாடுதுறை

திருவெண்காடு:

மயிலாடுதுறை மாவட்ட பகுதிகளில் பருவம் தவறிய மழையால் சம்பா சாகுபடியில் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏக்கருக்கு 15 மூட்டை நெல் மட்டுமே கிடைப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பருவம் தவறி பெய்த மழை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கீழச்சாலை, வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, மங்கைமடம், ஆதமங்கலம், பெருமங்கலம், கொண்டல், வள்ளுவக்குடி மற்றும் திருக்கடையூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 1-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை பரவலாக மழை பெய்தது.

பருவம் தவறி பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து, தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்தன. வயலில் சாய்ந்து தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள் முளைத்தன. அறுவடை செய்து மகசூலாக கிடைக்க வேண்டிய நெல்மணிகள் முளைத்ததால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

கூடுதல் இழப்பீடு

வயலில் ஈரப்பதம் அதிகமாக இருந்ததால் அறுவடை எந்திரங்களை இறக்கி அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. மழை பாதிப்புக்கு எக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

ஆனால் இந்த இழப்பீடு சாகுபடி செலவுக்கு கட்டுப்படியாகாது என்றும், ஏக்கருக்கு ரூ.30 ஆயிரத்துக்கும் அதிகமாக இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

சிரமங்களுக்கு இடையே சாகுபடி

இந்த நிலையில் நெல் அறுவடையின்போது எதிர்பார்த்ததை விட கூடுதல் மகசூல் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக விவசாயிகள் கண்ணீருடன் கூறுகிறார்கள்.

இதுகுறித்து கீழச்சாலையை சேர்ந்த விவசாயி லிங்கேஸ்வரன் கூறுகையில், 'பல்வேறு சிரமங்களுக்கு இடையே சம்பா சாகுபடி செய்தோம். கனமழையால் நான் நடவு செய்திருந்த 4 ஏக்கர் வயலில் மழை நீர் புகுந்தது. நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் முளைத்து, பெரும் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இழப்பீட்டு தொகையை அதிகரித்து வழங்க வேண்டும்' என்றார்.

திருக்கடையூர்

திருக்கடையூர் பகுதியில் சம்பா நெல் அறுவடை பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. திருக்கடையூர் சுற்றுவட்டார பகுதியில் 30 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பருவம் தவறி பெய்த மழையால் நெற்கதிர்கள் தண்ணீரில் சாய்ந்து அழுகிவிட்டன.

மீதம் இருந்தை நெற்கதிர்களை பாதுகாத்து விவசாயிகள் அறுவடை பணிகளை மேற்கொண்டு உள்ளனர். ஆட்களை வைத்து கூடுதல் கூலி கொடுத்து தண்ணீரில் நின்று அறுவடை பணியை விவசாயிகள் மேற்கொண்டனர்.

வாடகை அதிகரிப்பு

திருக்கடையூர், பிள்ளைபெருமாநல்லூர், டீ. மணல்மேடு, கிளியூர், கண்ணங்குடி, ராமன்கோட்டகம், மடப்புரம், மாத்தூர், கிடங்கல், மருதம்பள்ளம், மாமாகுடி, காலமநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் எந்திரம் மூலம் அறுவடை பணி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு அறுவடை எந்திரங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.2,600 வாடகை கொடுத்து அறுவடை பணியில் ஈடுபட்டனர். இந்த ஆண்டு போதுமான அளவில் அறுவடை எந்திரங்கள் கிடைக்காததால் ஒரு மணி நேரத்திற்கு ரூ.2,800 வரை வாடகை கொடுக்க வேண்டி உள்ளதாக விவசாயிகள் கூறுகிறார்கள்.

இதுகுறித்து திருக்கடையூரை சேர்ந்த விவசாய பாதுகாப்பு சங்க தலைவர் ராமமூர்த்தி கூறியதாவது:-

ஏக்கருக்கு 15 மூட்டைகள்

தொடர் மழையால் சம்பா சாகுபடியில் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. அறுவடை எந்திர வாடகையும் உயர்ந்து விட்டது. மழை பாதிப்பு மற்றும் பல்வேறு காரணங்களால் கூடுதலாக செலவு செய்தும் பலன் இல்லை.

மழையால் நெற்கதிர்கள் பாதிக்கப்பட்டதால் ஏக்கருக்கு 30 மூட்டை நெல் கிடைக்க வேண்டிய நிலையில் தற்போது 15 மூட்டை நெல் மட்டுமே கிடைக்கிறது. சில இடங்களில் இதை விட குறைவாகவே மகசூல் கிடைக்கிறது. எனவே விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story