கடும் வெயில் காரணமாக விளைச்சல் குறைந்தது:ஈரோட்டில் மாம்பழம் விலை உயர்வு


கடும் வெயில் காரணமாக விளைச்சல் குறைந்தது:ஈரோட்டில் மாம்பழம் விலை உயர்வு
x

கடும் வெயில் காரணமாக விளைச்சல் குறைந்து ஈரோட்டில் மாம்பழம் விலை உயர்ந்தது.

ஈரோடு

கடும் வெயில் காரணமாக விளைச்சல் குறைந்து ஈரோட்டில் மாம்பழம் விலை உயர்ந்தது.

மாம்பழம்

ஈரோடு மாவட்டத்தில் மாம்பழங்கள் குறைந்த அளவிலேயே விளைவிக்கப்படுகிறது. இதனால் ஈரோடு மாவட்டத்துக்கு அருகே உள்ள சேலம், கிருஷ்ணகிரி, சங்ககிரி, மேச்சேரி, ஆத்தூர், வனவாசி, நங்கவள்ளி, தலைவாசல் போன்ற பகுதியில் இருந்து மாம்பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. ஈரோட்டில் ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் இருந்தே நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட், சம்பத் நகர் மற்றும் பெரியார் நகர் உழவர் சந்தைகள் உள்பட அனைத்து கடைகளிலும் பல்வேறு வகை மாம்பழங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பங்கனப்பள்ளி, செந்தூரம், மல்கோவா, கிளி மூக்கு போன்ற வகை மாம்பழங்கள் அதிக அளவில் விற்பனைக்கு வந்துள்ளன.

சேலம், கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளில் அதிகம் விளைச்சல் ஆகும் செந்தூரம், கிளி மூக்கு போன்ற ரக மாம்பழங்கள் கடந்த ஆண்டு விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ஒரு கிலோ ரூ.35-க்கு விற்கப்பட்ட செந்தூரம் இந்த ஆண்டு ரூ.80 முதல் ரூ.110 வரை விற்கப்படுகிறது. இதேபோல் ரூ.30-க்கு விற்பனையான கிளி மூக்கு மாம்பழம் இந்த ஆண்டு ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் மாம்பழம் வரத்து குறைந்து இருப்பது தான்.

இதேபோல் பெங்களுரா, மல்கோவா, இமாம் சந்த், குண்டு நடுச்சாலை போன்ற ரக மாம்பழங்களும் விற்பனைக்கு வர தொடங்கியுள்ளன. இவற்றின் விலையும் கடந்த ஆண்டை விட 2 மடங்கு அதிகரித்துள்ளது.

கடும் வெயில்

இதுகுறித்து மாம்பழ வியாபாரிகள் கூறியதாவது:-

ஈரோட்டுக்கு சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி போன்ற பகுதியில் இருந்து அதிக அளவில் மாம்பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. தற்போது மாம்பழம் சீசன் தொடங்கி விட்டாலும் வரத்து மிகவும் குறைவாகவே உள்ளது. இதனால் மாம்பழங்கள் விலை அதிகரித்துள்ளது. ஓசூர், பெங்களூரு, ஆந்திரா, கர்நாடகா போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு வகை மாம்பழங்கள் விற்பனைக்கு வர தொடங்கியுள்ளன. இந்த மாம்பழங்கள் வரத்து அதிகரித்தால் விலை குறைய வாய்ப்பு உள்ளது.

ஈரோட்டில் கடந்த சில மாதங்களாகவே கடும் வெயில் வாட்டி வருவதால் மா மரத்தில் காய் பிடிக்காமல் பூக்களிலேயே உதிர்ந்து விடுகிறது. மேலும் மாங்காய் முழு வளர்ச்சி இல்லாமல் வெம்பி விழுந்து விடுவதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதனால்தான் தற்போது சீசன் தொடங்கியும் மாம்பழம் வரத்து குறைவாக உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story