தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் கப்பல்களில் யோகா பயிற்சி


தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் கப்பல்களில் யோகா பயிற்சி
x
தினத்தந்தி 22 Jun 2023 12:15 AM IST (Updated: 22 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் கப்பல்களில் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் கப்பல்களில் யோகா பயிற்சி நேற்று நடந்தது. இதில் கப்பல் மாலுமிகள், ஊழியர்கள் பங்கேற்று யோகாசனம் செய்தனர்.

யோகா தினம்

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 9-வது சர்வதேச யோகா தினம் 'வாசுதைவ குடும்பத்துக்கு யோகா' என்பதை மையமாக கொண்டு 'ஒரு உலகம், ஒரு குடும்பம், ஒரு வருங்காலம்' என்பதை உணர்த்தும் வகையில் யோகா செயல்விளக்கம் துறைமுகத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்தது. மத்திய கப்பல், துறைமுகங்கள் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகத்தின் முன்முயற்சியாக இந்திய கடற்சார் சமூகத்தின் சார்பாக 'யோகா சாகர்மாலா' என்ற யோகா நிகழ்வு நடத்தப்பட்டது. துறைமுக சமுதாய கூட்டரங்கில் நடந்த யோகா தின நிகழ்ச்சியில் துறைமுக அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் கலந்து கொண்டு யோகா பயற்சி மேற்கொண்டனர். 'வாழும் கலை' அமைப்பை சேர்ந்த யோகா பயிற்சியாளர்கள் யோகா பயிற்சிகளை செய்து காட்டினர்.

கப்பல்களில் யோகாசனம்

துறைமுகத்தின் கப்பல் தளங்கள் மற்றும் கப்பல்கள் காத்திருக்கும் பகுதிகளின் உள்ள கப்பல்களிலும் யோகா செயல்முறை பயிற்சி நடந்தது. கப்பல் ஊழியர்கள், மாலுமிகள் யோகா பயிற்சி மேற்கொண்டனர். துறைமுகத்தின் 5 மெகாவாட் சூரிய மின்சக்தி ஆலை திட்டத் தளம் மற்றும் துறைமுகப் பள்ளி ஆகியவற்றிலும் யோகா செயல்விளக்கம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதேபோல் துறைமுக உபயோகிப்பாளர்கள் பிரத்தியேக யோகாசன நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்ச்சிகளில் துறைமுக அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story