100 சதவீத மானியத்தில் உரங்கள் பெற விண்ணப்பிக்கலாம்
குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் 100 சதவீத மானியத்தில் உரங்கள் பெற விண்ணப்பிக்கலாம் உதவி இயக்குனர் தகவல்
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டார விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ரசாயன உரங்கள் வழங்க குறுவை தொகுப்பு திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சீர்காழி வட்டாரத்தில் 10 ஆயிரத்து 500 ஏக்கர் குறுவை சாகுபடி இலக்காக நிர்ணயிக்கபட்டுள்ளது. இதில் 7ஆயிரத்து 300 ஏக்கருக்கு குறுவை சிறப்பு தொகுப்பாக ஏக்கர் ஒன்றுக்கு ஒரு மூட்டை யூரியா, ஒரு மூட்டை டி.ஏ.பி உரம் மற்றும் 25 கிலோ பொட்டாஷ் உரம் அடங்கிய உரத்தொகுப்பு 100 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. ஒரு விவசாயி அதிகபட்சமாக 2.5 ஏக்கருக்கு மட்டுமே குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். எனவே, குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை அணுகி உழவன் செயலி மூலம் தங்கள் விண்ணப்பத்தினை பதிவு செய்து குறுவை தொகுப்பு திட்ட பயன்களை பெற்று பயனடையமாறு சீர்காழி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன் கூறியுள்ளார்.