முதியோரின் பிரச்சினைக்கு தீர்வு பெற தொலைபேசியில் தொடர்புகொள்ளலாம்
முதியோரின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் முதியோருக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலெக்டர் விசாகன் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைச்சாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமர்நாத், சமூக நல அலுவலர் புஷ்பகலா மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்தனர்.
இதையடுத்து முதியோருக்கான உதவி எண் 14567 மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய சுவரொட்டியை கலெக்டர் வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில், முதியோரின் நலன்கருதி அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறது. மேலும் முதியோருக்கு உதவுதல், நலத்திட்ட உதவிகள், வழிகாட்டுதல், பிரச்சினைகளை தீர்க்க மனநல ஆலோசனைகள், கள அளவிலான ஆதரவு போன்றவற்றுக்கு 14567 எனும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் முதியவர்கள் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் முதியோர் இல்லம், பராமரிப்பாளர் சேவை, செயல்பாட்டு மையங்கள், உணர்வு ரீதியிலான ஆதரவு, முதியோர் கைவிடப்படுதல், துன்புறுத்தப்படுதல், சட்ட உதவி, ஓய்வூதியம் தொடர்பான பிரச்சினைகளுக்கும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் கூறினார்.