படித்தால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற முடியும்


படித்தால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற முடியும்
x

படித்தால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசினார்.

ராணிப்பேட்டை

சமையல் பொருட்கள்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த ஐப்பேடு ஊராட்சியில் இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் 7 இருளர் குடும்பங்கள் மற்றும் 13 வரிய நிலையிலுள்ள குடும்பங்களுக்கு 30 பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு இருளர் சமுதாயத்தை சேர்ந்த 20 குடும்பத்திற்கு சமையல் பொருட்கள் வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

வீடுகட்ட ஆணை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வசிக்கும் 152 பழங்குடியினர் மக்களுக்கு வீடு கட்டுவதற்கான அனுமதி பழங்குடியினர் நலத்துறை மூலம் கிடைக்கப்பெற்று நடப்பாண்டில் 52 நபர்களுக்கு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு வழங்கிடவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் பழங்குடியினர் வீட்டு மனைப்பட்டா, அரசின் நலத்திட்டங்கள் பெறுவதற்கான சான்றுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக மின்னணு குடும்ப அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டைகள், ஆதார் கார்டு, வங்கிப் புத்தகம், பழங்குடியினருக்கான சான்று, வீட்டுமனைப் பட்டா, வீடு கட்டுவதற்கான ஆணைகள் உள்ளிட்ட அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

படித்தால் மட்டுமே

உங்கள் பிள்ளைகளை நன்கு படிக்க வையுங்கள், படித்தால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற முடியும். உங்களுக்காக அரசு வேலைவாய்ப்புகளில் 7.5 சதவீத இடஒதுக்கீடு உள்ளது. இதன் மூலம் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு படித்திருந்தாலே அரசு வேலை பெற வாய்ப்பு உள்ளது. மேலும், உங்கள் குழந்தைகளுக்கு நன்கு ஊட்டச்சத்துள்ள இயற்கையான உணவுகளை கொடுங்கள். ஏனென்றால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊட்டச்சத்து பற்றாக்குறையினால் அதிகளவில் பாதிப்பட்டுள்ளனர். அந்தந்த பகுதிகளில் கிடைக்கும் சிறுதானியங்கள், பழங்கள், கீரைகள் போன்ற உணவுகளை சாப்பிடுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

தாசில்தார் ஆனந்தன், சோளிங்கர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனசேகரன், குமார், ஒன்றியக் குழு உறுப்பினர் சாவித்திரிபெருமாள் மற்றும் வருவாய் ஆய்வாளர் சதிஷ் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story