விளையாட்டு போட்டிகளுக்கு இணையதளத்தில் பதிவு செய்யலாம்
முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளுக்கு இணையதளத்தில் பதிவு செய்யலாம் என தென்காசி மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளுக்கு இணையதளத்தில் பதிவு செய்யலாம் என தென்காசி மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
விளையாட்டு போட்டி
தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தென்காசி மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தென்காசி மாவட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் பொதுப்பிரிவு, பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்காக மாவட்ட அளவில் நடைபெற உள்ளது.
இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ள விளையாட்டு வீரர்கள் அனைவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரி ஆன www.sdat.tn.gov.in என்ற முகவரியில் வீரர்களின் குழு மற்றும் தனி நபர்களின் அனைத்து விவரங்களையும் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வயது வரம்பு
பொதுப்பிரிவில் 15 வயது முதல் 35 வயது வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கபடி, சிலம்பம், தடகளம், இறகு பந்து, கையுந்து பந்து போட்டிகளும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு 12 வயது முதல், 19 மற்றும் 17 வயது முதல் 25 வயது வரை கபடி, சிலம்பம், தடகளம், இறகுப்பந்து, கையுந்து பந்து, கால்பந்து, மேசை பந்து, நீச்சல், வளைகோல் பந்து போட்டிகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு எறிபந்து, இறகுப்பந்து, சிறப்பு கையேந்து பந்து, தடகளம், கபடி போட்டிகளும் நடைபெறுகின்றன.
மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு இல்லை. அரசு ஊழியர்களுக்கு சதுரங்கம், கபடி, தடகளம், இறகுப்பந்து, கையுந்து பந்து போட்டிகளும் நடைபெறுகின்றது. இவர்களுக்கும் வயது வரம்பு இல்லை.
மாநில போட்டிக்கு...
பளு தூக்குதல், கடற்கரை கையுந்து பந்து மற்றும் டென்னிஸ் விளையாட்டு போட்டிகள் மண்டல அளவில் நடத்தப்பட்டு வெற்றி பெறும் அணிகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.
பிற விளையாட்டுகள் மாவட்ட அளவில் நடத்தப்பட்டு மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள். அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகளில் அரசு வங்கி ஊழியர்கள், கூட்டுறவு வங்கி ஊழியர்கள் மற்றும் சீருடை பணியாளர்களும் கலந்து கொள்ளலாம்.
விருது
அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகளில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் கலந்து கொள்ள இயலாது. இந்த போட்டிகளில் அதிக அளவு பதக்கம் பெறக்கூடிய பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளின் பயிற்சியாளர்களுக்கு தமிழ்நாடு அரசின் சிறந்த பயிற்சியாளர் மற்றும் சிறந்த உடற்கல்வி ஆசிரியர், இயக்குனர் ஆகிய விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்படும்.
இதில் பெறப்படும் சான்றிதழ்கள் மூலம் கல்வி வேலை வாய்ப்புகளில் சிறப்பு சலுகைகள் பெற இயலும். போட்டியில் திறமையானவர்களை கண்டறிவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு அவ்வாறு கண்டறியப்படும். திறமையான பள்ளி, கல்லூரி மாணவர்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதிகள் மற்றும் சிறப்பு விளையாட்டு விடுதிகளில் உள்ள காலியிடங்களில் முன்னுரிமை அடிப்படையில் நேரடியாக சேர்த்து தொடர் பயிற்சிகள் வழங்கப்படும்.
பரிசுக்கோப்பை
போட்டிகளில் சிறப்பாக வெற்றி பெறும் மாணவ மாணவிகள் மற்றும் அரசு ஊழியர்கள் தமிழ்நாடு அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு தேசிய அளவிலான பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள், விளையாடு இந்தியா போட்டிகள், அகில இந்திய அளவிலான குடிமை பணியாளர்கள் போட்டிகள் உள்ளிட்டவற்றிற்கு அனுப்பப்படுவர்.
ஒவ்வொரு போட்டியிலும் மாநில அளவில் முதல் மூன்று இடங்கள் பெறுவோருக்கு பரிசு தொகையுடன் முதலமைச்சர் கோப்பை வழங்கப்படும். அனைத்து பிரிவுகளிலும் சேர்த்து ஒட்டுமொத்தமாக அதிக பதக்கங்கள் பெற்று முதல் மூன்று இடம் பெறும் மாவட்டங்களுக்கு ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்புக்கான முதலமைச்சர் கோப்பை வழங்கப்படும்.
இணையதள பதிவு
இணையதள பதிவு செய்தவர்கள் மட்டுமே விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள இயலும்.
எந்த காரணம் கொண்டும் வேறு வழிமுறை மூலமாக போட்டிகளில் பங்கேற்க முடியாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.