குண்டர் சட்டத்தில் இருந்து கணவரை காப்பாற்ற வேண்டும்


குண்டர் சட்டத்தில் இருந்து கணவரை காப்பாற்ற வேண்டும்
x

வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் காலில் இளம்பெண் விழுந்து குண்டர் சட்டத்தில் இருந்து கணவரை காப்பாற்ற வேண்டும் என்று கதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

வேலூர்

வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் காலில் இளம்பெண் விழுந்து குண்டர் சட்டத்தில் இருந்து கணவரை காப்பாற்ற வேண்டும் என்று கதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கலெக்டர் காலில் விழுந்த பெண்

வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் அரங்கில் இருந்து கலெக்டர் குமாரவேல்பாண்டியன் அவருடைய அறை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு குழந்தைகளுடன் நின்று கொண்டிருந்த பெண் திடீரென கலெக்டர் காலில் விழுந்தார். அவர் தனது குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்று கதறி அழுதார்.

அதனால் அதிர்ச்சி அடைந்த கலெக்டர், அந்த பெண்ணிடம் விசாரித்தார். அப்போது அந்த பெண் வேலூர் சதுப்பேரியை சேர்ந்த அருள்ஜோதி (வயது 35) என்றும், அவரது கணவர் சீனிவாசன். அவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். மகள்களுக்கு சரியாக மூளைவளர்ச்சி இல்லை என்று தெரிவித்தார்.

கணவரை காப்பாற்றுங்கள்...

மேலும் அவர் கூறுகையில், எனது கணவர் சீனிவாசன் கூலி வேலை செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாகாயம் போலீசார் சாராயம் விற்ற வழக்கில் அவரை கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்துள்ளனர். தற்போது அவரை குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கான முயற்சியை போலீசார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர். நான் மூளை வளர்ச்சியில்லாத குழந்தைகளுடன் தவித்து வருகிறேன். எனது கணவர் இல்லாமல் எனது குழந்தைகளுடன் என்னால் வாழ முடியாது. எனக்கு பொருளாதாரத்துக்கு எவ்வித வழியும் இல்லை.

எனது கணவரை குண்டர் சட்டத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார். இதையடுத்து கலெக்டர், அந்த பெண்ணிற்கு ஆறுதல் கூறினார். குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து செல்லுங்கள். இதுகுறித்து போலீசாரிடம் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து அருள்ஜோதி தனது குழந்தைகளுடன் அங்கிருந்து சென்றார்.

இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story